இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா 2020 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்தியன் பிரீமியர் லீக் 2008 இல் தொடங்கப்பட்டதில் இருந்து அதில் பங்கேற்ற அவர், கடந்த 2021 வரை தொடர்ந்து விளையாடினார். இந்த நீண்ட பயணத்தில் அவர் சிஎஸ்கே அணிக்காகவும், கொச்சி டஸ்கர் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
அவர் விளையாடிய காலங்களில் சிஎஸ்கே அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. ரெய்னாவைப் பொறுத்தவரை, ஐபிஎல் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார். அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் எனவும், சின்ன தல எனவும் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் அவரை 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் யாரும் தேர்வு செய்யாத காரணத்தால் ஐபிஎல் இல் இருந்து அவர் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இப்போது ஓய்வு பெற்ற வீரர்களுக்கான சாலை பாதுகாப்பு டி 20 லீக் உள்ளிட்ட போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக தனது பெயரை அவர் பதிவு செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு அடிப்படை விலையாக 40000 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரின் பெயர் ஏலப் பட்டியலிலும் இருந்தது.
ஆனால் நேற்று நடந்த வீரர்கள் ஏலத்தில் அவர் பெயர் ஏலத்தில் அழைக்கப்படவில்லை. சுரேஷ் ரெய்னாவின் பெயரை ஏலதாரர் சாரு சர்மா அழைக்காமல் அடுத்த பெயருக்கு கடந்து சென்றார். இது ஏன் என்ற குழப்பம் இப்போது எழுந்துள்ளது. இதற்குக் காரணம் ரெய்னா லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் தன் பெயரை பதிவு செய்யவே இல்லை என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்கலாமே: எல்லாமே அவரோட சூழ்ச்சி தான். என்ன அணியில் இருந்து தூக்கிட்டு போயும் போயும் இந்த தமிழ்நாட்டு பிளேயர அணியில போட்டாங்க. அது தான் எனக்கு புரியல – அம்பாதி ராயுடு பேச்சு
இருப்பினும், ஏற்பாட்டாளர்கள் தான் ரெய்னாவை ஏலத்தில் $40,000 அடிப்படை விலையில் சேர்த்ததாக சொல்லப்படுகிறது. LPL 2023 ஏலத்தில் சுரேஷ் ரெய்னா தனது பெயரைச் சமர்ப்பித்ததாக வெளியான செய்திகளால் கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாடுவதைக் காண ஆவலாக இருந்தனர். இந்நிலையில் இப்போது இப்படி ஒரு குழப்பம் நடந்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.