உலககோப்பைக்கு தொடர் ஆரமிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையை அனைத்து அணிகளும் சிறப்பான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல முன்னாள் வீரர்கள் பலரும் அணி தேர்வு குறித்தும், அணி வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த அந்நிலையில் 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றிருந்த போது அந்த அணியில் இடம் பெற்றிருந்த சுரேஷ் ரெய்னா எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா 5 சதங்களுடன் 648 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியிருந்தது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா விளையாடியது போன்று எதிர்வரும் 2023 உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில் அதனை செய்வார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சுப்மன் கில் இந்த ஆண்டு முழுவதுமே மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். அவரால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் பிரகாசிக்க முடியும். 50 ஓவரும் களத்தில் நின்று முழுமையாக பேட்டிங் செய்யும் திறன் அவரிடம் உள்ளது. அதேபோன்று அவர் ஒருமுறை களத்தில் செட்டாகி விட்டால் நிலைத்து நின்று பெரிய ரன் குவிப்பினை நோக்கி செல்வார் அதுவே அவருடைய ஆட்டமாகவும் இருந்து வருகிறது.
மேலும் என்னை பொறுத்தவரை அவரை நான் இந்திய அணியின் லீடராகவும் பார்க்கிறேன். சமீப காலமாகவே அவரது பேட்டிங் ஃபார்ம் மற்றும் கைகளை நகர்த்தும் வேகம் என அனைத்துமே அற்புதமாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களை மட்டும் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களையும் அவர் மிக அற்புதமாக எதிர்கொண்டு ரன்களை குவிக்கிறார். அவரை வீழ்த்துவது பவுலர்களுக்கு கடினமான காரியமாகவே இருக்கிறது.
நிச்சயம் அவர் எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் என அசத்திய சுப்மன் கில் 75 ரன்கள் சராசரியுடன் 300 ரன்களை குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.