- Advertisement -
Homeவிளையாட்டுமேட்ச் தோத்தாலும் வருணை நெனச்சு பெருமையா இருக்கு.. இனிமே தான் இருக்கு ஆட்டமே.. சூர்யகுமார் பேட்டி

மேட்ச் தோத்தாலும் வருணை நெனச்சு பெருமையா இருக்கு.. இனிமே தான் இருக்கு ஆட்டமே.. சூர்யகுமார் பேட்டி

- Advertisement-

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணியின் கைவசம் இருந்த போட்டி தான் தோல்வியாக மாறி இருந்தது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி வரும் இளம் வீரர்கள் அதிகம் இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க மண்ணிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யாருமே சிறப்பாக ஆடி ரன் சேர்க்கவில்லை. கடைசி கட்டத்தில் அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி, எளிதான இலக்காக இருந்த போதிலும் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் சிக்கி ரன் சேர்க்க முடியாமல் தடுமாற்றம் கண்டது.

நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற, 86 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது தென்னாபிரிக்க அணி. இதனால் இந்திய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு இருந்தும், ஸ்டப்ஸ் மற்றும் கோட்சி ஆகிய இருவரும் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் 19 வது ஓவரில் இலக்கையும் எட்டிப் பிடித்திருந்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தொடரும் தற்போது 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக இந்திய அணி 11 டி20 போட்டிகளை வென்றிருந்த நிலையில் அதுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் எத்தனை ரன்கள் அடித்தாலும் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். டி20 போட்டிகளில் நிச்சயம் 125 முதல் 140 என்பது சிறந்த ஸ்கோராக இருக்காது.

- Advertisement-

ஆனால் எங்கள் அணி வீரர்கள் பந்து வீசியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அதிலும் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 125 ரன்கள் என்ற இலக்கை கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது டி20 போட்டியில் ஒருவர் ஐந்து விக்கெட் எடுப்பது என்பது நம்ப முடியாத ஒன்று.

வருண் சக்கரவர்த்தி இந்த மாதிரி பந்து வீசுவதற்காக மிகவும் கடினமாக உழைத்ததுடன் தற்போது அதனை நிறைவேற்றவும் செய்துள்ளார். மிக அற்புதமாகவும் வருண் சக்கரவர்த்தி தற்போது செயல்பட்டு வருகிறார். இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் அதில் நிறைய பொழுதுபோக்கு காத்திருப்பதாகவே நான் உணர்கிறேன்” என சூர்யகுமார் யாதவ் கூறி உள்ளார்.

சற்று முன்