இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரே ஒரு தவறால் அது கைவிட்டு போனதாக ரசிகர்கள் தற்போது விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய அணியை பொருத்தவரையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் வரையிலும் இளம் வீரர்கள் அதிகம் பேர் இடம்பிடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டி20 போட்டி என வரும்போது பெரும்பாலானவர்கள் இளம் வீரர்களாக இருப்பது அந்த அணியின் உத்வேகத்தையும் எடுத்துரைக்கும் வகையில் உள்ளது.
வெறுமனே இளம் வீரர்களாக இல்லாமல் பொறுப்புணர்ந்து ஆடுவதுடன் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அவர்கள் அசத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டதுடன் சஞ்சு சாம்சன் சதத்தின் உதவியால் 200 ரன்களையும் கடந்திருந்தது. பந்து வீச்சிலும் கலக்கிய இந்திய அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்க, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களின் பங்களிப்பால் 124 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த போட்டியில் இந்தியா நிச்சயம் தோல்வியடைந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்க்க ஒரு கட்டத்தில் வெற்றிபெறும் வாய்ப்பையும் மிக பலமாக தக்க வைத்திருந்தது. 86 ரன்களுக்குள் தென்னாபிரிக்க அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, மீதம் இருக்கும் மூன்று விக்கெட்டுகளையும் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்களான கோட்ஸி மற்றும் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் இணைந்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் வெற்றி இலக்கையும் எட்டிப் பிடித்திருந்தனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தியும் அவர்கள் தோல்வியடையும் சூழல் தான் உருவாகியது. இந்நிலையில் தான் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் எடுத்த ஒரு முடிவு இந்திய அணிக்கு தவறாக அமைந்து விட்டதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த போட்டியை பொருத்தவரையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் இருவரும் 8 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங் ஆகிய மூவரும் இணைந்து 10 ஓவர்களில் ஒரு விக்கெட் தான் எடுத்திருந்தனர். இதில் அர்ஷ்தீப் சிங் ஓவரில் ரன்களும் அதிகமாக சென்றிருந்தது.
இப்படி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சாக இருந்தும் அக்சர் படேல் ஒரு ஓவர் மட்டும் தான் வீசியிருந்தார். இதனால், ஆவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் இடத்தில் அக்சர் படேல் இரண்டு ஓவர்கள் கூடுதலாக வீசி இருந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு திருப்புமுனை உருவாகி வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.