- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக் பேட்டிங் வந்ததும் முடிவு பண்ணிட்டேன்.. நாங்க ரன் சேர்த்ததே இந்த ட்ரிக்ல தான்.. சூர்யகுமார்...

ஹர்திக் பேட்டிங் வந்ததும் முடிவு பண்ணிட்டேன்.. நாங்க ரன் சேர்த்ததே இந்த ட்ரிக்ல தான்.. சூர்யகுமார் வெளிப்படை..

- Advertisement 1-

இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்ததால் அவர்கள் தங்களின் பேட்டிங் மீதான தவறுகளை திருத்திக் கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை கடுமையாக சொதப்பியுள்ளது என்றே சொல்லலாம்.

லீக் சுற்றில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்த ரிஷப் பந்த், ரோஹித் ஷர்மா ஆகியோர் மீண்டும் ஒருமுறை சூப்பர் 8 போட்டியில் ஏமாற்றம் அளித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் 8 ரன்களிலும், ரிஷப் பந்த் 20 ரன்களிலும் அவுட் ஆக இதுவரை இரட்டை இலக்க ரன்களை தொடாமல் இருந்த கோலி, 24 ரன்கள் மட்டுமே சேர்த்து மீண்டும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இப்படி இந்திய அணியின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்து போனாலும் அமெரிக்காவுக்கு எதிராக அரைச்சதம் அடித்து மீட்டிருந்த சூர்யகுமார் யாதவ், மீண்டும் ஒரு பலமான இன்னிங்ஸை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடி உள்ளார். பேட்ஸ்மேன் ரன் சேர்ப்பதற்கு கடினமாக இருந்த பிட்ச்சில் மிக அசால்டாக பவுண்டரிகளை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ், 27 பந்துகளிலேயே அரைச்சதம் கடந்து அசத்தி இருந்தார்.

அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்திக் பாண்டியாவும் நல்ல ரன் சேர்க்க, இந்திய அணி 180 ரன்களை கடந்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணியால் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போனதால் 134 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். இதனால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 8 ஆரம்பமும் அவர்களுக்கு நன்றாக அமைந்துள்ளது.

- Advertisement 2-

மேலும் இந்திய அணியின் பேட்டிங் வலுவில்லாமல் இருந்த போதிலும் அரைச்சதம் அடித்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். இதற்கு பின் அவர் பேசுகையில், “இந்த ஆட்டத்திற்கு பின் தான் நிறைய கடின உழைப்பும், நிறைய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளது. எனது மனதில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தேன். இந்த ஆட்ட நாயகன் விருதை நீங்கள் பந்து வீச்சாளருக்கு கொடுத்திருந்தாலும் எனக்கு பெரிய விஷயம் கிடையாது.

மேலும் இந்த தொடரில் முதல்முறையாக ஒரு இந்திய பேட்ஸ்மேனுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்துள்ளது. ஆட்டத்தில் உங்களுடைய திட்டம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் ஆட வேண்டும். ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்த போது நீங்கள் அதே நோக்கத்துடன் உங்களது பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். அப்படித் தான் போட்டியில் இருவரும் சேர்ந்து முன்னெடுத்துச் சென்று 180 ரன்கள் வரை சேர்த்திருந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

சற்று முன்