டி20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக ராகுல் டிராவிட் அத்துடன் தனது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து மாறப்போவதாக அறிவித்திருந்தார். இதனால் அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் பயிற்சியாளராக மாறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருந்தது. இதில் முதலாவதாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தது இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரின் பெயரை தான்.
ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளின் சிறந்த ஆலோசகராக கம்பீர் இருந்து வந்தார். அத்துடன் மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றவும் கம்பீர் உதவி செய்திருந்தார். அவர் இந்திய அணியிலும் பயிற்சியாளராக மாறினால் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ராகுல் டிராவிட்டை போல மற்றொரு இந்திய வீரர் தான் பயிற்சியாளராக மாறப் போகிறார் என்ற தகவல்களும் வெளியாகி வந்த நிலையில் டபுள். வி. ராமன் என்ற முன்னாள் வீரரின் பெயரும் அடிபட்டது. ஆனால் இறுதியில் நேர்காணலில் கம்பீரின் திட்டங்கள் பிசிசிஐ தரப்பில் பலருக்கும் பிடித்திருந்ததாகவும் அதன் பெயரில் அவரே தலைமை பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் இலங்கை அணிக்கு எதிராக ஜூலை 27ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டி20 தொடர் முதல் தனது பணியை கௌதம் கம்பீர் ஆரம்பிக்க உள்ள நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான தன்வீர் அகமது, இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் தான் ஆகியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தன்வீர் அகமது, இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கம்பீரின் பயிற்சியாளர் பதவி குறித்து குறிப்பிட்டிருந்த தன்வீர் அகமது, “விவிஎஸ் லட்சுமண் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இந்தியா பி அணியின் பயிற்சியாளராக நீண்ட காலம் இருந்து வருகிறார். ஆனால், கம்பீர் அதை தாண்டி எதோ சிலரின் உதவியால் ரசீது வாங்கிக் கொண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக மாறியது போல உள்ளது” என பிசிசிஐயின் முடிவை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவதற்கு தகுதி இல்லை என்றும் தன்வீர் அகமது விமர்சனம் செய்துள்ள நிலையில், இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் குறிப்பிட்டதை போல, சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும், அதற்கு முன்பு ராகுல் டிராவிட் இல்லாமல் போன சில தொடர்களிலும் விவிஎஸ் லட்சுமண் சிறந்த பயிற்சியாளராக இந்திய அணிக்கு மாறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.