நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இரண்டாவதாக பாகிஸ்தான அணி சேசிங் செய்ய களமிறங்குவதற்கு முன்னர் பெய்ய துவங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் போட்டி நடத்தப்பட வாய்ப்பே இல்லை என்று அம்பயர்கள் முடிவு எடுத்து போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணியின் டாப் ஆர்டரானது மிக மோசமான சொதப்பலை சந்தித்துள்ளது கண்கூடாக தெரிந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களின் மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போட்டி துவங்கியதுமே டாசில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியை ஆரம்பத்திலேயே புரட்டி எடுத்தனர். அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பை வரலாற்றிலேயே இந்திய அணியின் டாப் ஆர்டர் மூன்று வீரர்களும் கிளீன் போல்ட் ஆனது இதுவே முதல் முறை. இது இந்திய அணியின் மோசமான சாதனையாகவும் மாறியுள்ளது.
அந்த வகையில் இந்த போட்டியில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவையும், நான்கு ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியையும் ஷாஹீன் அப்ரிடி கிளீன் போல்ட் ஆக்கினார். அதேபோன்று சுப்மன் கில்லை 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஹாரிஸ் ரவூப் கிளீன் போல்ட் ஆக்கினார். இதற்கு முன்னதாக இதேபோன்று இந்திய அணி டாப் 3-வீரர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் தான் போல்ட் ஆகி இருந்தனர்.
ஆனால் ஆசிய கோப்பை தொடரில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. மேலும் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி, 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணி இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக திணறியுள்ளதால் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை சாமளிக்கப்போகிறார்கள் என்று நினைத்து தற்போதே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.