அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடியது. இதில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 30 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார்.அதேபோல் உள்ளூர் வீரரான பிஷ்னாய் 21 பந்துகளில் 35 ரன்ல்களும், கேப்டன் ஃபின்ச் 10 பந்துகளில் 19 ரன்களும் விளாசினர். டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் கொயட்சே 4 விக்கெட்டுகளையும்,. டேனியல் சாம்ஸ் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதன் பின் 172 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் டூ பிளெஸிஸ் டக் அவுட்டில் வெளியேற அதிர்ச்சி கொடுத்தார். பின் வந்த கோடி ஷெட்டி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் பொறுப்புடன் ஆடிய கான்வே 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த மில்லர் 10 ரன்களிலும், சான்ட்னர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி திணறியது. ஆனால் மிலிந்த் குமார் – டேனியல் சாம்ஸ் கூட்டணி சான் பிராசிஸ்கோ பவுலர்களை சிதறடித்தது. மிலிந்த் குமார் சிறப்பாக கம்பெனி கொடுக்க, டேனியல் சாம்ஸ் அனைத்து பவுலர்களை ஓடவிட்டார். கடைசி நேரத்தில் சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்களிலும், மிலிந்த் குமார் 42 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கடைசி 8 பந்தில் 7 ரன்கள் வெற்றி என்ற நிலையில், சால்வேஜ் சிக்சர் அடித்து டெக்ஸாஸ் சூப்பர் சிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் டிஎஸ்கே அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமோ, அதேபோல் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னேறியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.