இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பங்களாதேஷ் அணி இலங்கை அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாகவும் மாறியுள்ளது.
ஏனெனில் நேற்றைய போட்டியின் போது இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்த விதம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற சம்பவமாக மாறியுள்ளது. ஏனெனில் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்த ஒருவர் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ஆட்டமிழந்ததாக அம்பயர்களால் அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.
அந்த வகையில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 24.2 வது ஓவரில் 135 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டை இழந்தது. அதன்படி சதீரா சமரவிக்ரமா ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்ததாக ஆஞ்சலோ மேத்யூஸ் களமிறங்க உள்ளே வந்தார். ஆனால் அவர் தயாராவதற்கு நேரம் எடுத்துக் கொண்டதால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டடார்.
மேத்யூஸ் பேட்டிங் உள்ளே வந்ததும் அவருடைய ஹெல்மெட்டில் இருந்த குறையை கவனித்த அவர் அதனை மாற்றுவதற்காகவே முயன்றார். ஆனால் மேத்யூஸ் இப்படி தயாராவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் வங்கதேச வீரர்கள் அம்பயர்களிடம் விக்கெட் கேட்டு முறையிட அம்பயர்களும் “டைம் அவுட்” முறையில் அவர் ஆட்டம் இழந்ததாகவும் அறிவித்தனர். இப்படி அம்பயர்கள் மேத்யூஸ்க்கு அவுட் கொடுத்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள வேளையில் விதிமுறைகள் அவரது விக்கெட் குறித்து என்ன கூறுகிறது? என்பதை இந்த பதிவில் காணலாம்.
அந்த வகையில் கிரிக்கெட் விதிமுறை 40.1.1 என்கிற விதிமுறைப்படி : ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தாலோ அல்லது ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினாலோ அடுத்து வரும் வீரர் இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த பந்தினை களத்தில் நின்று சந்திக்க வேண்டும். ஒருவேளை அப்படி குறிப்பிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரத்தை உள்ளே வரும் பேட்ஸ்மேன் எடுத்துக் கொண்டால் அவர் பேட்டிங் செய்யாமலே ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட அம்பயர்களுக்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விதிமுறையின் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மேத்யூஸ் வேண்டுமென்றே நேரத்தை கடத்தவில்லை என்பதும் ஹெல்மெட்டில் ஏற்பட்ட பிரச்சனையாலே அவர் சற்று நேரத்தை எடுத்துக் கொண்டார். அதனை வங்கதேச அணியும் அம்பயர்களும் சற்று புரிந்து கொண்டிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.