வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். புன்னர் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதனேஷ் மட்டும் 47 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன்பின்னர் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒட்டுமொத்தமாக வெளுத்தது. 2ம் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் விளாசி அசத்தியுள்ளனர். அதிலும் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த சதத்தை விளாசிய பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உணர்வுப்பூர்வமாக இருந்தார். வழக்கமான தனது ஸ்டைலில் ஹெல்மெட்டை ஒரு கையிலும், பேட்டை இன்னொரு கையிலும் தூக்கி வானத்தை பார்த்த கொண்டாடிய அவர், உடனடியாக ரோகித் சர்மாவிடம் சென்று அவரை கட்டயனைத்து கொண்டாடினார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சதம் பற்றி யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறும்போது, இந்த சதம் எனக்கு உணர்வுப்பூர்வமானது. ஏனென்றால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதினும் அரிதானது. இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பாட்டுள்ளேன். இந்த இன்னிங்ஸின் போது ரோகித் சர்மா எனக்கு வழிகாட்டியாக இருந்தார். இந்த மைதானத்தில் எப்படி ஆட வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.
இன்றைய நாளின் ஆட்டத்தை தொடங்குவதற்கு முன், ரோகித் சர்மா என்னிடம், தொடக்க வீரராக நீதான் சரியான வீரர். நிச்சயம் சிறப்பாக ஆட வேண்டும் என்று கூறியது எனது நம்பிக்கை அதிகரித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால் வேறு மாதிரியானது. பந்து ஸ்விங்காகும் போது மிகவும் பிடிக்கும். எனக்கான சவாலாக பார்ப்பேன். இந்த சதத்தை எனது பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன்.
இதுவெறும் தொடக்கம் தான். வரும் நாட்களில் இன்னும் நன்றாக விளையாடுவேன் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். கிரிக்கெட்டுக்காக மும்பையில் பானிபூரி விற்பனை செய்து தெருக்களில் விளையாடி வந்த ஜெய்ஸ்வால், படிப்படியாக உயர்ந்து இன்று சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.