இலங்கை அணிக்கு எதிரான போட்டியை 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது. இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 92 ரன்களை விளாசினர். இதன் மூலமாக இலங்கை அணிக்கு 358 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட சூழலில், இலங்கை அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது. இதன் காரணமாக இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் அரையிறுதி சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்று சாதித்துள்ளது.
இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னையில் இந்த பயணத்தை தொடங்கிய போது, எங்களின் முதல் இலக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பது தான். அதன்பின் அரையிறுதி, இறுதிப்போட்டியில் வெல்வதே இலக்கு. இந்த 7 போட்டிகளிலும் எங்களின் அணுகுமுறை ஒரே மாதிரி வெற்றிக்கானதாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் முன் நின்றார்கள்.
நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் ரன் சேர்ப்பது சவாலாக அமைந்தது. ஆனால் இன்றைய பேட்டிங் நல்ல பெஞ்ச் மார்க்காக அமைந்தது. ஏனென்றால் இதுபோன்ற ஆடுகளத்தில் 350 ரன்கள் என்பது மிகச்சிறந்த ஸ்கோராகும். நிச்சயம் பேட்ஸ்மென்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும். அதன்பின் பவிலர்கள் எளிதாக வெற்றியை பெற்று கொடுத்துவிட்டார்கள்.
ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை மனதளவில் பலமிக்க வீரர். இன்றைய ஆட்டத்தில் அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் காட்டிவிட்டார். அவரிடம் இருந்து இதனை தான் இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்த்திருந்தது. அவர் முன் நிற்கும் சவாலை அவர் ஏற்பதற்கு தயாராகிவிட்டார். சிராஜ் மிகவும் தரமான பவுலர். அவரால் புதிய பந்தை எப்படி பேச வைக்க வேண்டும் என்று தெரியும். புதிய பந்தில் என்ன செய்ய வேண்டும் என்ற திறமை அவரிடம் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சிறந்த பவுலிங்கை குழுவாக இந்திய அணி வீரர்கள் செயல்படுத்தியுள்ளனர். அதுதான் இந்திய அணியின் பலமாக உள்ளது. இதனை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். டிஆர்எஸ் பொறுத்தவரை பவுலர் மற்றும் கீப்பர் முடிவில் விட்டுவிட்டேன். எப்போதும் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பேன். இன்றைய ஆட்டத்தில் ஒன்று தவறாகவும், மற்றொன்று சரியானதாகவும் அமைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.