இந்திய அணிக்கு இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் சர்வதேச போட்டிகள் வந்து கொண்டே இருப்பதைப் பற்றி ஒரு பக்கம் ரசிகர்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகளும் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் பிசிசிஐ இதுகுறித்த அதிகார அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என்றும் தெரிகிறது.
இன்னொரு பக்கம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் நடந்த மீட்டிங்கில் பல விஷயங்கள் சமரசத்தை எட்டாமல் போக, இது பற்றிய செய்திகள் அனைத்தும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தோனி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களின் நிலை என்ன என்பதும் அடுத்த சில மாதங்களுக்குள் தெரிய வரலாம்.
இதற்குக் காரணம், 43 வயதாகும் தோனி சிஎஸ்கே அணியில் ஆடி வரும் சூழலில் குறைந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ கூறினால், அவர் தொடர்ந்து ஆடுவதும் கேள்விக்குறியாகி விடும். அதேபோல மும்பை அணியில் இடம் பிடித்து 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருந்தார்.
அவரது ரசிகர்கள் மும்பை அணியை விட்டு வேறு அணிக்காக ரோஹித் ஆட வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் தோனி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி நிறைய வதந்திகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதே போல சென்னை அணியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது தோனி ஒருவேளை ஓய்வினை அறிவித்தால் அவரது இடத்தில் ஆட அதே அணியில் விக்கெட் கீப்பர்கள் இல்லை என்பதுதான். தோனி ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஆடினாலும் வரும் காலங்களில் இன்னொரு விக்கெட் கீப்பரை சென்னை அணி தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பஞ்சாப் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரரான ஜித்தேஷ் ஷர்மாவை சென்னை அணி சேர்க்க முயற்சிக்கலாம் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜித்தேஷ் ஷர்மா ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடி நிறைய போட்டிகளில் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தோனியை போலவே விக்கெட் கீப்பிங், பேட்டிங், ஃபினிஷிங் ரோல் என அனைத்திலும் அற்புதமாக விளங்கும் ஜிதேஷ் ஷர்மாவை சிஎஸ்கே அணி சொந்தமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் இஷன் கிஷான் ஃபார்மில் இல்லாததால் சிறந்த விக்கெட் கீப்பர் இல்லாமல் தவிக்கும் மும்பை அணியும் ஜிதேஷ் சர்மாவை சொந்தமாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.