ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் புச்சி பாபு தொடர் நடைபெற இருக்கிறது. நான்கு நாள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறும். இந்தியாவிலேயே மிகவும் பாரம்பரியமிக்க தொடராக இது கருதப்படுகிறது.
இந்த தொடரில் வெளிநாட்டு அணிகளுக்கு கூட கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ரஞ்சி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி சில காலமாக சரியாக விளையாடாமல் போனது கூட இந்த தொடர் நடத்தப்படாமல் இருந்ததை காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.இந்த நிலையில் புஜ்ஜி பாபு தொடர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் முன் எப்போதும் எட்டு அணிகள் தான் பங்கேற்கும். தற்போது இது 12 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடங்குவதற்கு முன்பு இந்த போட்டி நடைபெறுவதால் பல்வேறு அணிகளும் இந்த தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டுவார்கள்.
அதன்படி இந்த தொடரில் ஜார்கண்ட் அணியை சேர்த்துக் கொள்ளுமாறு மகேந்திர சிங் தோனி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகி இருக்கிறார். எனினும் தோனியின் அறிவுறுத்தலையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிராகரிக்கும் அளவிற்கு இந்த தொடர் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பழனி, தோனி எங்களை தொடர்பு கொண்டு ஜார்கண்ட் அணியை இந்த தொடரில் சேர்த்துக் கொள்ளுமாறு அணுகினார். ஆனால் எங்களால் ஜார்க்கண்ட் அணியை இதற்குள் சேர்க்க முடியவில்லை.
ஏற்கனவே பல அணிகள் இந்த தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்தனர். 12 அணிகள் ஏற்கனவே பங்கேற்று இருந்ததால் எங்களால் சர்வீஸ் மற்றும் சட்டிஸ்கர் அணியை கூட சேர்க்க முடியவில்லை. இம்முறை இந்த தொடரை கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் வேகபந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க முடிவெடுத்து இருக்கிறோம் என்று பழனி கூறினார். 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரை நடத்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலவு செய்ய உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மூன்று லட்சமும்இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு இரண்டு லட்சமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.