அடுத்தடுத்து ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனிபோட்ட கிரிக்கெட் உலகம், இப்போது TNPL தொடர் மூலமாக அதைத் தொடர்கிறது. இந்தியாவின் 2வது சிறந்த டி20 லீக் என பெயர்பெற்ற இந்த TNPL மூலம் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் TNPL போட்டிகள் தொடங்கிய முதல் போட்டியில் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. அதில் கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சேப்பாக்கம் அணி, 20 ஓவர்களில் 217 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரதோஷ் பால் அதிக பட்சமாக 55 பந்துகளில் 88 ரன்களை சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 35 ரன்கள் சேர்த்தார். கேப்டன் அபாரஜித் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.
இந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரை சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் வீசினார். அந்த ஓவரில் மொத்தம் 26 ரன்கள் விளாசப்பட்டது. அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. கடைசி பந்தில் அவர் போல்ட் செய்தார் ஆனால் அந்த பந்து நோ பால் (பிரீ ஹிட்) என அம்பயர் அறிவிக்க, மீண்டும் அவர் கடைசி பந்தை வீசினார். அதில் பேட்ஸ்மேன் சஞ்சய் யாதவ் சிக்ஸ் அடித்தார்.
இந்த நிலையில் மீண்டும் அந்த பந்து நோ பாலாக இருந்தது. அதில் 2 ரன்கள் ஓடியும் எடுக்கப்பட்டது. அதோடு மேலும் அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் அவர் பந்தை வீச, அது வைடாக மாறியது. அதனால் திரும்ப வீசப்பட்ட அந்த பந்தில் பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தார். அந்த கடைசி ஒரு பந்தில் மட்டும் 18 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே: ஓய்வை அறிவிக்க போகிறாரா தோனி? மிகவும் எமோஷனலான வீடீயோவை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம். மீண்டும் குழப்பத்தில் ரசிகர்கள்.
இதன் பின்னர் ஆடிய சேலம் ஸ்பார்ட்டான்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். 88 ரன்கள் விளாசிய சென்னை அணி வீரர் பிரதோஷ் பால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.