அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ காலம் கொடுத்துள்ளது. பல விதிகள் இதில் சுவாரஸ்யமாக இருக்கும் அதே வேளையில் ஒவ்வொரு அணிகளும் இதன் அடிப்படையில் எப்படி முடிவெடுக்க போகிறார்கள் என்பதும் நிச்சயம் விறுவிறுப்பை எகிற வைக்கும்.
ஒவ்வொரு அணிகளும் எப்படி சாமர்த்தியமாக பிசிசிஐ விதியை கையாண்டு நல்ல வீரர்களை தக்க வைக்க முயற்சிக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையே ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் நிச்சயம் பல திருப்புமுனைகள் இந்த முறை மெகா ஏலத்திற்கு முன்பாக நடக்கும் என்று தெரிகிறது.
ரோஹித் ஷர்மா கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியாவின் தலைமையும் மிக மோசமாகத்தான் இருந்தது. அவருக்கு எதிரான குரல் அதிகமாக இருந்த சூழலில் அடுத்த சீசனில் ரோஹித்தை மீண்டும் கேப்டன் ஆக்குவார்களா அல்லது ஹர்திக்கையே தொடர்வார்களா அல்லது இருவரையும் வெளியேற்றிவிட்டு புதிய அணியை கட்டமைப்பார்களா என நிறைய கேள்விகள் மும்பை அணியை சுற்றி எழுந்துள்ளது.
இது பற்றி முன்னாள் வீரரான டாம் மூடி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரை 18 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கலாம். ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றால் 14 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கலாம். மேலும் அணியில் இருந்து விலகிப் போவதும் அவருடைய விருப்பம். சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அவரது பார்ம், ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்திறன் உள்ளிட்ட விஷயங்களை பார்க்கும் போது 18 கோடிக்கு தகுதியான வீரர் என நீங்கள் நினைக்கிறீர்களா.
18 கோடி ரூபாய்க்கு தகுதியுள்ள வீரர் என்றால் நீங்கள் மேட்ச் வின்னராக தொடர்ந்து செயல்பட வேண்டும். ஆனால் ஹர்திக் பாண்டியா ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்திறனில் அதிகம் திணறித் தான் வருகிறார். இதே போல இஷான் கிஷன் ஒரு அபாரமான வீரர் தான். ஆனால் எத்தனை போட்டியில் அவர் தனது பேட்டிங் மூலம் அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார்?. அதில் மிகப்பெரிய கேள்வி இருப்பதால் 14 கோடிக்கு அவரை தக்கவைக்கும் போது அதற்கான பலன் திரும்ப கிடைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.
இதனால் சில கடினமான முடிவுகளை மும்பை அணி எடுக்க வேண்டும். பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஆகியோரை மும்பை அணி தக்க வைத்து ரோஹித் ஷர்மா என்ன விரும்புகிறார் என்பது பற்றி அவருடன் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அவரை ஏலத்தில் கூட RTM கார்டு மூலம் வாங்கி கொள்ளலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது. தங்கள் வீரர்களை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவுகள் எதிராகவே திரும்பி இருந்தது. உதாரணத்திற்கு இஷான் கிஷன் மட்டும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அதிக தொகைக்கு எடுத்தும் அதற்கான பலன் திரும்ப கிடைக்கவில்லை” என டாம் மூடி தெரிவித்துள்ளார்.