2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை தற்போது எட்டி உள்ள நிலையில், இதுவரை 3 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் ராஜஸ்தான் அணி பலமாக விளங்கினாலும் பிளே ஆப் சுற்று நெருங்கி வந்த சமயத்தில் தொடர்ச்சியாக சில தோல்விகளையும் சந்தித்து அதிர்ச்சி கொடுத்திருந்தது.
ஆனாலும், தங்கள் அணியில் உள்ள தவறுகளை சரி செய்து கொண்டு பிளே ஆப் சுற்றில் கலக்குவார்கள் என்ற நம்பிக்கையிலும் ராஜஸ்தான் ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே, டெல்லி மற்றும் லக்னோ அணிகளின் பிளே ஆப் வாய்ப்பும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் சூழலில், இரண்டு இடங்களுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே, ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் பட்லர் இல்லாத சூழலில், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் என அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இதற்கிடையே தான் யாரும் எதிர்பாராத வகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக ஆடி 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரியான் பராக்கும் நன்றாக ஆடி 48 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி எளிதாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தான் பேட்டிங்கில் கோட்டை விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ், பந்து வீச்சில் பட்டையை கிளப்பி இருந்தது. முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை போல்ட் எடுக்க, ரிலீ ரசவ் மற்றும் சஷாங்க் சிங் விக்கெட்டை ஒரே ஓவரில் சாய்த்திருந்தார் ஆவேஷ் கான்.
இதனால், குறைவான ஸ்கோர் அடித்த ராஜஸ்தான் அணிக்கும் வெற்றி வாய்ப்பு உருவானது. அப்படி ஒரு சூழலில் தான், இந்த சீசனில் முக்கியமான ஒரு சாதனையை எட்டிப் பிடித்துள்ளார் ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். இந்த சீசனில் இதுவரை 6 முறை முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்துள்ளார் போல்ட்.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் ஓவரில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளராக முதல் 3 இடங்களில் போல்ட் தான் இருந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு 8 முறை முதல் ஓவரில் விக்கெட் எடுத்திருந்த போல்ட், 2023 ஆம் ஆண்டு 7 முறை விக்கெட் எடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக 3 வது இடத்திலும் அவரே 6 முறை முதல் ஓவரில் விக்கெட் எடுத்து அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.