இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்கள் பலரும் விலகிய போது நிறைய இளம் வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். அந்த சமயத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன் மட்டுமில்லாமல் நம்பர் ஒன் அணியாக மாற்றியதில் முன்னாள் கேப்டன் தோனிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இப்படி சர்வதேச போட்டிகளில் எந்த தாக்கத்தை தோனி ஏற்படுத்தினாரோ அதையே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோதும் செயல்படுத்தி இருந்தார்.
சிஎஸ்கே அணி ஐந்து கோப்பைகளை கைப்பற்றியிருந்தாலும் அந்த அணியின் மீது அதிகமாக விமர்சனம் இருப்பதற்கு காரணம், ஃபார்மில் இல்லாத சில வீரர்களுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் என்பதுதான். அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவும் ஒருவர். இவர் சிஎஸ்கே அன்காக ஆடத் தொடங்கிய முதல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வழங்கி விக்கெட்டுகளை அதிகம் எடுக்காமல் இருந்தார்.
ஆனால், தோனியின் ஆதரவால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்டுகளை எடுத்திருந்த துஷார் தேஷ்பாண்டே சிஎஸ்கே அணி 5 வது முறையாக கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் 15 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருந்த தேஷ்பாண்டே இந்திய அணிக்காக ஜிம்பாப்வே தொடரிலும் இடம் பிடித்திருந்தார்.
அப்படி இருக்கையில் தோனி ஒரு கேப்டனாக தனக்கு ஆதரவு கொடுத்தது பற்றி துஷார் தேஷ்பாண்டே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “நான் சர்வதேச அரங்கில் ஜெயிப்பதற்கு அனைத்து தரமும் இருப்பதாக தோனி என்னிடம் கூறினார். ஆனால் பந்து வீச ஓடி வரும்போது அமைதியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய தோனி, ரசிகர்கள் கூட்டத்தால் ஒருபோதும் திசை திரும்பக் கூடாது என அறிவுறுத்தினார்.
தோனி போன்ற ஒருவர் சர்வதேச அரங்கில் உன்னால் ஜெயிக்க முடியும் என கூறியதையே அவ்வளவு பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன்” என்றார். இதேபோல குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்கள் கொடுக்க,அவரிடம் ‘நீங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. நீங்கள் வீசியது அனைத்துமே நல்ல பந்துகள் தான். ஆனால் இந்த நாள் நமக்கானதாக அமையவில்லை. அடுத்த போட்டியில் இதே போல செயல்படுங்கள்’ என்று கூறினாராம்.
இதே போல, மற்றொரு கணத்தில் தோனியின் அறிவுரை பற்றி பேசிய துஷார் தேஷ்பாண்டே, “நான் யார்க்கர் பந்துகளை வீசிக் கொண்டிருந்த போது திடீரென பவுன்சர் பந்தை வீசியதும் பேட்ஸ்மேன் அதை 100 மீட்டர் சிக்ஸர் அடித்துவிட்டார். அப்போது என்னை அழைத்த தோனி, ‘ஏன் பவுன்சர் வீசினீர்கள்?’ என கேட்டபோது பேட்ஸ்மேன் யார்க்கர் பந்தை எதிர்பார்க்கும் போது மாற்றி வீசலாம் என்று நினைத்ததாக கூறினேன்.
அதற்கு தோனியும், ‘யார்க்கர் என்பது யார்க்கர் தான். யாராலும் அதனை எளிதில் அடிக்க முடியாது’ என்று கூறினார். மேலும் வேகப்பந்துவீச்சாளராக நான் இருப்பதால் ஃபிட்னஸிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்” என துஷார் தேஷ்பாண்டே கூறி உள்ளார்.