கடந்த 17 ஐபிஎல் தொடர்களில் ஒரு வீரர் 15 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் போனாலோ அல்லது தக்க வைக்கப்பட்டு வந்தாலோ அது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இவை அனைத்தையும் கடந்த மினி ஏலத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் தலைகீழாக மாற்றி எழுதி ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே புது சரித்திரத்தை உருவாக்கி இருந்தனர்.
கொல்கத்தா அணி மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பேட் கம்மின்ஸை 20 கோடி ரூபாய்க்கு எடுத்து புதிய கேப்டனாக அறிவித்திருந்தது. இந்திய வீரர்களே 20 கோடி ரூபாயை ஐபிஎல் ஏலத்தில் தொடாமல் இருக்கும் சூழலில் வெளிநாட்டு வீரர்களுக்கு இப்படி ஒரு மவுசு உருவானது ஒரு பக்கம் ஆதரவையும் இன்னொரு பக்கம் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்திய வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம் பிடித்தாலும் வெளிநாட்டு வீரர்கள் ஏதாவது காரணத்தின் பெயரில் தொடருக்கு பாதியிலேயே விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் இப்படி ஒரு பிரம்மாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுப்பதன் மூலம் அந்த அணிகளுக்கு பின் விளைவுகள் ஏற்படும் என்றும் பலரும் எச்சரித்திருந்தனர்.
ஆனால் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் முறையே ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் மூலம் கடந்த ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படி அதிக தொகைக்கு வீரர்கள் ஏலம் போன அணிகள் தான் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி அனைத்து விமர்சனங்களையும் அடித்து நொறுக்கி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் இந்த முறை 2 வீரர்கள் 20 கோடி ரூபாய்க்கு மேல் தக்க வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸ், ஹெட், ஹென்ரிச் என வெளிநாட்டு வீரர்களை அதிகம் நம்பி உள்ளது. இதில் ஹென்ரிச் க்ளாஸனை ஹைதராபாத் 23 கோடி ரூபாய்க்கு தக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதே போல, லக்னோ அணியில் இருந்து கேப்டன் கே எல் ராகுல் விலக உள்ளதால் நிகோலஸ் பூரனை தக்க வைத்து கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், பூரனையும் லக்னோ அணி நிர்வாகம் 20 கோடி ரூபாய்க்கு மேல் தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் பட்சத்தில், கடந்த ஏலத்தில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை 20 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டது போல, இந்த முறை இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அது போன்ற ஒரு தொகைக்கு தக்க வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.