உலகில் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் யார் என யாரை கேட்டாலும் நிச்சயம் இந்திய அணியின் பும்ராவை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பும்ராவின் பந்துகள் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவதுடன் மட்டுமில்லாமல் எந்த தொடராக இருந்தாலும் தனது பந்துவீச்சின் மூலம் முத்திரையையும் அவர் பதித்து விடுகிறார்.
இதுவரை இந்திய அணி கண்ட சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல் உலக அரங்கிலும் முக்கியமான ஒரு பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா, ஐசிசி தொடர்களில் இந்திய அணி பலமுறை வெற்றி பெறுவதற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு பும்ராவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில் பும்ரா குறித்து பாகிஸ்தானில் பிறந்து துபாய் அணியில் ஆடிவரும் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது. பாகிஸ்தானில் பிறந்த ஜாஹூர் கான், துபாய் அணிக்காக ஆடி வருகிறார். ஒருமுறை ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்ற போது மும்பை அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக மூன்று மாதம் பணிபுரிந்து வந்தார்.
அந்த சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி பேசிய ஜாஹூர் கான், “நான் மும்பை அணியுடன் மூன்று மாதங்கள் இருந்தேன். அப்போது ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட பல வீரர்களுடன் நிறைய நேரத்தை செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. எனது பந்துவீச்சு பும்ராவுக்கும் பெரிய அளவில் பிடித்திருந்தது.
நான் ஸ்லோ பந்தங்களை அதிகமாக வீசுவதால் எப்படி அதனை சரியான கிரிப்பில் வீசுகிறீர்கள் என்பதை பற்றி என்னிடம் சில ஆலோசனைகளையும் பும்ரா கேட்டிருந்தார். உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்னிடம் அப்படி கேட்டது மிகப்பெரிய விஷயமாக அமைந்திருந்தது. T10 போட்டியில் நான் மெய்டன் ஓவர் வீசியதை பும்ரா கவனித்துள்ளார்.
அதே போல நானும் பும்ராவிடம் நீங்கள் எப்படி புதிய பந்தில் யார்க்கர் பந்துகளை வீசுகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டேன். ஏனென்றால், இந்த உலகத்திலேயே இரண்டு பேர் தான் புதிய பந்தில் யார்க்கர் பந்தை வீசக்கூடியவர்கள். அதில் ஒன்று மலிங்கா, இன்னொருவர் பும்ரா.
மேலும் ரோஹித் ஷர்மாவும் என்னை சுதந்திரமாக வைத்திருந்தார். இந்த மொத்த மைதானமும் உங்களுடையது தான். என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்றும் கூறியிருந்தார். நான் ரோஹித் ஷர்மாவுக்கு பந்து வீசும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன். எனது ஸ்லோ பந்தை சரியாக கணித்து ஆட முடியாமல் திணறி இருந்தார்.
எப்படி இவ்வளவு மெதுவாக பந்து வீசுகிறீர்கள் என என்னிடமும் கேட்டு கொண்டார். அத்துடன் உங்களது பந்தை பேட்ஸ்மேன் அடித்தால் கூட அது சிக்ஸாக மாறுவது மிக கடினம் என்றும் ரோஹித் என்னை பாராட்டி இருந்தார்” என ஜாஹூர் கான் தெரிவித்துள்ளார்.