வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி அடைந்து வரும் தோல்விகள் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டி20 கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த அடிப்படை தவறுகளை ரசிகர்கள் பலரும் விளாசி வருகின்றனர். 8 விக்கெட்டுகள் சென்ற பின்னரும், 9வது விக்கெட்டுக்கு வரும் பேட்ஸ்மேன் 26 ரன்கள் அடிக்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்றும் விமர்சித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவ்வளவு ஐபிஎல் அனுபவம் இருந்தும் இப்படி மோசமான தோல்வியடைவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இன்னும் 2 மாதங்களில் உலகக்கோப்பைத் தொடரை வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சில் சொதப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் இந்திய அணியும், ராகுல் டிராவிட்டும் தோல்விக்கு பாதைக்கு அணியை கொண்டு செல்வதாகவும் முன்னாள் வீரர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசும் போது, இந்திய அணி 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை வென்றது. அதன்பின் 7 முறை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவிட்டது. அதில் ஒரேயொரு முறை மட்டுமே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் கூட 16வது ஓவரில் சாஹல் ஒரு ரன் அவுட் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் அவர் பந்துவீச அழைக்கப்படவே இல்லை. இத்தனைக்கு அவருக்கு மீதம் ஒரு ஓவர் இருந்தது. உடனடியாக கடைசி 2 வீரர்களை வீழ்த்த வேகப்பந்துவீச்சாளர்களை வீச வைத்து இந்திய அணி தோல்வியை சந்திக்கிறது. இதுபோன்ற தருணங்களில் ஸ்மார்ட்டாக சிந்தித்து அடிப்படை விசயாங்களை செய்தாலே போதுமானது.
இந்திய அணிக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வெறி குறைந்துவிட்டது. இந்திய அணி வீர்ரகள் சாதாரணமான அணியாகவே தெரிகிறார்கள். ரன்கள் சேர்க்கவும், விக்கெட் வீழ்த்தவும் நல்ல பசி இருக்க வேண்டும். அது இல்லாமல் கிரிக்கெட் விளையாடினால் என்ன சொல்லியும் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.