இந்திய அணியில் கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு பின்னால் இந்திய அணியை சுற்றி நடந்த சில முக்கியமான முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்தை மட்டும் தான் சந்தித்து வந்தது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவை மாற்றிவிட்டு புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்திருந்தனர். பொதுவாக வெற்றி பெறும் அணிகளில் துணை கேப்டனாக இருக்கும் நபர்தான் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார்கள்.
அப்படி இருந்தும் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருக்க அவருக்கான வாய்ப்பை தற்போது கொடுக்காமல் சூர்யகுமாரை கேப்டனாகவும் நியமித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இளம் வீரரான கில்லிற்கு இரண்டு தொடரிலும் துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா, சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் முக்கியமான இடத்தை பிடித்து வரும் நிலையில் அவருக்கு இந்த பதவி தேவைதானா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதேபோல ஒரு நாள் அணியிலும் ரோஹித்திற்கு அடுத்தபடியாக கே.எல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் இருந்தும் கில்லுக்கு ஏன் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலேயே கில்லின் கேப்டன்சி மற்றும் சில முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது தவறான முடிவு தான் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.
அப்படி இருக்கையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர், கில்லின் திறன் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது முதன் முறையாக அவரை பார்த்த போது ஒரு விதமான ஈர்ப்பு உருவாகிவிட்டது. அவரது திறமை என்னை பெரிய அளவில் கவர்ந்திருந்த நிலையில், யார் இந்த பையன் இந்த அளவுக்கு அற்புதமாக ஆடுகிறான் என்றுதான் என் மனதில் பட்டது.
தனது ஆட்டத்தை நன்கு தெரிந்து கொண்டு எப்படி சூழலுக்கேற்ப ஆட வேண்டும் என்பதை புரிந்து கொண்டு எந்த சவாலையும் பார்த்தும் ஒளியாத வீரர் கில். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கேப்டனாக மாறியதன் பின்னர் தான் அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டம் வெளியாகி இருந்தது. அதேபோன்று தான் கில்லுக்கும் நடக்கும் என நான் உணர்கிறேன்.
அவர் தற்போது கேப்டனாகவில்லை என்றாலும் லீடர்ஷிப் பொறுப்பு இருக்கக்கூடிய இடத்தில் இருப்பதால் நிச்சயம் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். மற்ற வீரர்களை தலைமை ஏற்கும் இடத்தில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கான பொறுப்பும் அதிகமாகிறது. இது கில் போன்ற இளம் வீரர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் அவர் மூன்று வடிவிலும் இந்திய அணியை வழிநடத்துவார்” என குறிப்பிட்டுள்ளார்.