இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை வென்று சொந்த மண்ணிற்கு வீரர்கள் வந்தடைந்த போது அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டிருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிகளும், பின்னர் திறந்த வெளி பேருந்தில் நடந்த பேரணியிலும் ரசிகர்கள் அலை கடல் போல் திரண்டு கொள்ள அந்த இடமே ஏதோ திருவிழாவிற்கு கூடியது போல உற்சாகமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடியுடன் உலக கோப்பை போட்டியில் ஆடியிருந்த அனைத்து வீரர்களும் ஒரு அனுபவத்தையும் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா தொடங்கி அனைவருமே பல விஷயங்களை மோடியுடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டனர். அந்த சமயத்தில் விராட் கோலி தனது தன்னம்பிக்கை குறித்தும், தனது ஈகோ குறித்தும் பேசி இருந்த விஷயங்கள் தற்போது பலரது கவனம் பெற்று வருகிறது.
“டி20 உலக கோப்பையை வென்ற தினம் என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அந்த தொடர் முழுக்க நான் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியாமல் போனதை நினைத்து வருத்தமடைந்திருந்தேன். என்னால் எனக்காகவும், அணிக்காகவும் சேர்த்து நன்றாக ஆட முடியவில்லை என ராகுல் டிராவிடம் ஏக்கத்துடன் தெரிவித்தேன். ‘சிறந்த சூழல் வரும் போது நீங்கள் நிச்சயம் நன்றாக ஆடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என அவர் கூறினார்.
ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் ஆடி வந்தேன். என்னால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியுமா என சந்தேகமே வந்துவிட்டது. இறுதி போட்டியில் முதல் நான்கு பந்துகளில் மூன்று ஃபோர்களை நான் அடித்ததும் ரோஹித்திடம் இது என்ன மாதிரி விளையாட்டு. ஒரு நேரத்தில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறினோம். ஆனால் இன்னொரு நாள் நினைத்தது போல அனைத்தும் நடக்கிறது என நான் வியந்து கூறினேன்.
அதன் பின்னர் மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் நான் சூழலை அறிந்து என்னை சரண்டர் செய்துவிட்டு ஆடினேன். அந்த நேரத்தில் அணிக்கு என்ன தேவையோ அதை கொடுக்க முடியும் என்று தருணத்தில் நினைத்திருந்தேன். சில விஷயங்கள் கண்டிப்பாக நடந்தே தீரும். அந்த இறுதிப் போட்டியிலும் கூட ஒரு கடினமான சூழலில் தான் என்னை ஆட வைத்திருந்தது.
அந்த சமயத்தில் நான் என்ன நினைத்தேன் என்பதை விவரிக்கவே முடியாது. இறுதிப்போட்டியும் மாறிய தருணத்தை நிச்சயம் என்னால் விவரிக்கவே முடியாது. நம்முடைய ஈகோ நமது ஆட்டத்தை விட அதிகமாக இருக்கும் போது போட்டியிலிருந்து உங்களை தள்ளிவிடும் என்று உணர்ந்தேன். இதனால் எனது ஈகோ உள்ளிட்ட பல விஷயங்களை போட்டிக்காக மாற்றி வைத்தேன். போட்டிக்கு மரியாதை கொடுக்கும்போது அது உங்களுக்கு திரும்ப கொடுக்கும்” என கோலி கூறி உள்ளார்.