டி 20 உலக கோப்பை தொடர் நாளை (ஜூன் 2) இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில், இதன் பயிற்சி போட்டிகள் தற்போது ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ஆடி வருகின்றனர்.
விராட் கோலி சமீபத்தில் தான் இந்திய அணியுடன் இணைந்திருந்தார். இதனால் அவர் அந்த பயிற்சி போட்டியில் களமிறங்கவில்லை. இதனிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார்.
ஆனால் ஆரம்பத்திலேயே ரன் சேர்க்க தடுமாற்றம் கண்ட அவர், 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி இருந்தார். தொடர்ந்து ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் நம்பிக்கையும் இந்த தொடரில் அதிகரித்துள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் டி20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் செய்த சில முக்கியமான சம்பவங்களை தற்போது பார்க்கப் போகிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடையும் நிலையில் இருந்த இந்தியாவை மீட்டெடுத்து வெற்றியை பெறச் செய்திருந்தார் விராட் கோலி. இன்று வரை பலராலும் அந்த இன்னிங்ஸ் பாராட்டப்பட்டு வரும் நிலையில், டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த பேட்டிங் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர்.
அப்படி இருக்கையில் டி 20 உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக முறை இரட்டை இலக்க ரன்களை அடித்த வீரராக கோலி உள்ளார். இவர் 12 முறை இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ள நிலையில், இவரை போலவே ரோஹித் சர்மாவும் ஒரு முக்கியமான மைல்கல்லை டி 20 உலக கோப்பை போட்டியில் தன் பக்கம் வைத்துள்ளார்.
அதாவது டி 20 உலக கோப்பை போட்டியில் கடைசி நான்கு ஓவர்களில் இதுவரை ஒரு முறை கூட ரோஹித் சர்மா அவுட்டானது கிடையாது. அது மட்டும் இல்லாமல் இந்த கடைசி நான்கு ஒவர்களில், மொத்தமாக 63 பந்துகளை சந்தித்துள்ள ரோஹித் சர்மா 195 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 123 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களாக இருக்கும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், லீக் போட்டிகளுடன் நாக் அவுட் போட்டிகளிலும் சொதப்பாமல் ஆடினால் நிச்சயம் இந்த முறை டி 20 உலக கோப்பையில் இந்திய அணியின் பெயரை எழுதி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.