ஐபிஎல் வரலாற்றில் மெகா ஏலத்திற்கு முன்பாக மிக முக்கியமான ஒரு தினம் சமீபத்தில் கடந்து விட்டதாக தெரிகிறது. பொதுவாக மினி ஏலம் என வரும்போது அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அது பற்றிய செய்திகள் ரசிகர்களை ஒரு வித உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வேளையில் ஒவ்வொரு அணிகளும் எப்படிப்பட்ட முடிவு எடுப்பார்கள் என்பதும் ரசிகர்களின் ஆவலை தொற்றிக் கொண்டுள்ள நிலையில் தான் தற்போது அது பற்றிய அறிவிப்பும் வெளியானது.
தோனி, ரோஹித் ஆகியோர் முறையே சென்னை மற்றும் மும்பை அணியில் தக்க வைத்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் மற்ற சில அணிகளின் முடிவு பரபரப்பை தான் ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர்கள் கண்ட மிக முக்கியமான பல வீரர்கள் இந்த முறை தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் ஆடி வந்த பட்லர், சாஹல், அஸ்வின் ஆகியோர், குஜராத்தில் ஆடிவந்த முகமது ஷமி, லக்னோவில் ஆடி வந்த ராகுல், கொல்கத்தாவின் கேப்டனாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் என பல பிரமாண்டமான வீரர்கள் அவர்களின் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதில் சில வீரர்களை மெகா ஏலத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதனை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுவரை 17 ஐபிஎல் தொடர்களாக ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத விராட் கோலி ஆடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் துணிச்சலாக சில முடிவுகள் எடுத்து எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் தயாராகி வருவதாகவே தெரிகிறது.
வெறும் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, விராட் கோலியை 21 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாளை 5 கோடி ரூபாய்க்கும், ராஜத் பட்டிதாரை 11 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மொத்தம் 41 கோடி ரூபாயை அவர்கள் செலவாக்கியுள்ள நிலையில் 79 கோடி மெகா ஏலத்திற்காக மிச்சம் உள்ளது. இதுவரை கையில் பணம் இருந்தும் சிறப்பான வீரர்களை தேர்ந்தெடுக்காமல் நல்லதொரு அணியை கட்டமைக்காமல் கோட்டை விட்டு வந்த ஆர்சிபி, இந்த முறை நிச்சயம் அதனை சரி செய்து ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதில் நிச்சயமாக கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில் தான் இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே தோனி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட எந்த வீரர்களும் செய்யாத முக்கியமான ஒரு சாதனையை படைத்து முதல் இந்திய வீரராக உருவெடுத்துள்ளார் விராட் கோலி. ஆர்சிபி அணி அவரை இந்த 21 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் தக்க வைத்து கொண்டுள்ளது. இதுவரை எந்த இந்திய வீரரும் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு அணியால் தக்க வைக்கப்பட்டோ, ஏலத்தில் எடுக்கப்பட்டோ வரலாறு கிடையாது.
தோனி, ரோஹித்திற்கு கூட அப்படி ஒரு பாக்கியம் கிடைக்காத நிலையில் விராட் கோலி முதல் இந்திய வீரராக 20 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளதும் கவனத்தைப் பெற்றுள்ளது. இன்னும் சிறப்பம்சமாக விராட் கோலி 18 முதல் 20 சீசன்களாக ஒரே அணிக்கு ஆடப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.