வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெடுகள் இழப்பிற்கு 256 ரன்களை சேர்த்தது. இதையடுத்து சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தல் வெற்றியை பெற்றது.
இதில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து அதிரடியாக சதம் விளாசினார். இது விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதமாகும். அதேபோல் டெஸ்ட். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இணைத்து மொத்தமாக 78 சதமாகும். சச்சினின் 100 சதங்களை சாதனையை எட்டுவதற்கு இன்னும் 22 சதங்களே தேவையாக உள்ளது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை விளாசி இருக்கிறார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்வதோடு, குறைந்த போட்டிகளில் 49 சதங்களை எட்டிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைப்பார். அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் குறைந்த இன்னிங்ஸ்களில் சர்வதேச கிரிக்கெட்டில் 26 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
அதேபோல் 35 ரன்களை கடந்த போது இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்தார். இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே 25,957 ரன்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார். இந்த போட்டியில் 35 ரன்கள் எடுத்தால், ஜெயவர்தனே சாதனையை முறியடிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
நேற்று 103 ரன்களை விளாசியதன் மூலமாக விராட் கோலி 26,026 ரன்களை எடுத்து அசத்தினார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார்.
இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இலங்கை அணியின் இடதுகை ஜாம்பவான் சங்கக்காராவும், 3வது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் உள்ளனர். மேலும், உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3வது முறையாக சதமடித்து அசத்தி இருக்கிறார்.