நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த சில தினங்களில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்த போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும் போட்டியை பற்றியது தான். லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியின் முடிவில் லக்னோ தான் வெற்றி பெற்றிருந்தது.
ஆனாலும், புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் இருந்த லக்னோ அணியின் ரன் ரேட் மிக மிக குறைவாக இருந்ததால் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் முதல் முறையாக தங்களின் மூன்றாவது சீசனில் இழந்தனர். இதற்கிடையே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பும் முடிவுக்கு வர, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளில் ஒன்று தான் 4 வது அணியாக பிளே ஆப் நுழைவார்கள் என்பதும் உறுதியானது.
இதற்கிடையே, ஏறக்குறைய லீக் சுற்றின் நாக் அவுட் போட்டி ஒன்றில் தான் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் சின்னசாமி மைதானத்தில் மோதியது. ஏற்கனவே, அங்கே போட்டிக்கு நடுவே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டது. மிக அதிசயமாக டாஸ் வென்ற ருத்துராஜ், பந்து வீச்சைத் தேர்வு செய்ய அதன் படி ஆர்சிபி அணி தங்களின் பேட்டிங்கை தொடங்கியது.
முதல் 3 ஓவர்களில் அவர்கள் 30 ரன்களை கடக்க, கோலி பறக்க விட்ட 2 சிக்ஸர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது. இதற்கிடையே, மழை குறுக்கிட போட்டி கொஞ்ச நேரம் தடைபட்டது. தொடர்ந்து, மீண்டும் பேட்டிங்கை தொடங்கிய ஆர்சிபி, நிதானமாக ரன் சேர்க்க, கோலி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்களுடன் 47 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
இதன் பின்னரும், பாப் டு பிளெஸ்ஸிஸ், ராஜத் படிதர், கேமரூன் க்ரீன் என வந்தவர்கள் அனைவரும் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 218 ரன்களை 5 விக்கெட்டுகள் இழந்து சேர்த்திருந்தது. இதற்கிடையே, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் இந்திய வீரராக அசத்தல் சாதனையை செய்து முடித்துள்ளார் விராட் கோலி.
இந்த சீசனில் 700 ரன்களை கடந்துள்ள கோலி, தற்போது 708 ரன்களுடன் ஆரஞ்ச் கேப்பையும் தன்வசம் வைத்துள்ளார். இதன் மூலம், இரண்டு சீசனில் 700 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தான் தற்போது கோலி பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக, இதே ஆர்சிபி அணிக்காக ஆடிய க்றிஸ் கெயில், இரண்டு ஐபிஎல் தொடர்களில் 700 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.