ஆசிய அணிகளை எடுத்துக் கொண்டாலே உடனடியாக நாம் நினைவுக்கு வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான். இவர்களைத் தொடர்ந்து இலங்கை அணியும் ஒரு காலத்தில் ஜொலித்து வந்த சூழலில் தற்போது மெல்ல மெல்ல பழைய ஃபார்மிற்கும் திரும்பி வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தற்போது தென்னாபிரிக்கா மட்டுமில்லாமல் இந்தியாவை தவிர அனைத்து டெஸ்ட் ஆடும் அணிகளையும் சர்வதேச அரங்கில் வீழ்த்தி தங்களின் திறனையும் நிரூபித்து வருகிறது. அந்த வகையில் வங்கதேச அணியும் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் கிரிக்கெட் பயணத்தை மேற்கொண்டாலும் பின்னர் மெல்ல மெல்ல பல அணிகளையும் வீழ்த்தி நிறைய தொடர்களையும் கைப்பற்றி வந்தது.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இத்தனை ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வந்தும் ஐசிசி தொடர்களில் அரை இறுதிக்கு கூட நுழைய முடியாமல் வங்கதேச அணி தவித்து வருகின்றது. அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் என சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அவர்களால் ஐசிசி தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலை தான் இருந்து வருகிறது.
ஆனால், அதே வேளையில் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களின் சொந்த மண்ணில் வென்று சரித்திரத்தை எழுதி இருந்தது வங்கதேச அணி. இதனை தொடர்ந்து இந்திய அணியையும் அவர்கள் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வங்கதேச அணி சாதனை புரியும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு போட்டியிலும் அவர்கள் பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தனர்.
முதல் போட்டியிலாவது முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கி இருந்தவர்கள் பின்னர் அதனை தொடர முடியாமல் தோல்வியடைந்து இருந்தனர். இதற்கிடையே வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற போவதாக அறிவித்திருந்தார்.
வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் ஆடவுள்ள தென்னாபிரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதில் மிர்பூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியுடன் ஷகிப் அல் ஹசன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் மிர்பூர் மைதானத்தில் போட்டி நடைபெறாது என்றும் தகவல்கள் கூறுகின்றது.
இதனால், ஷகிப் அல் ஹசன் ஓய்வு பெறுவாரா அல்லது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி ஒரு சூழலில் ஏறக்குறைய இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டி என கருதப்படும் சூழலில், இந்த போட்டிக்கு பின்னர் அவருக்கு கோலி கொடுத்த கிஃப்ட் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் நெகிழ வைத்துள்ளது.
டெஸ்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ள ஷகிப் அல் ஹசனுக்கு தந்து பேட் ஒன்றை நினைவு பரிசாக கொடுத்துள்ளார் கோலி. கிரிக்கெட் அரங்கில் எதிரிகளாக இருந்தாலும் வீரர்களாக அவர்கள் காண்பித்த நட்பு, அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.