இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தாங்கள் ஏற்கனவே பாக்கிஸ்தான் அணியோடு விளையாடிய போட்டியில் மழை காரணமாக தடைபட்டு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது தங்களது இரண்டாவது போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. செப்டம்பர் நான்காம் தேதி கண்டி மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது மழையின் தாக்கம் இருப்பது தெரிந்தும் அவர் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த வேளையில் இன்றைய போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். அதன்படி முதலில் விளையாடிய நேபாள் அணியானது 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய இந்திய அணியானது 2.1 ஓவரில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் தற்போது போட்டி தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது நேபாள் அணி முதல் ஐந்து ஓவர்களிலேயே மூன்று எளிதான கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணிக்கு வழங்கியது. ஆனால் அந்த மூன்று கேட்சிகளை விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் கோட்டை விட்டனர். அதேபோன்று இந்த போட்டியில் நேபாள் அணியின் துவக்க வீரரான ஆசிப் ஷேக் 1 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேச்சை விராட் கோலி தவற விட்டார்.
அதனை சரியாக பயன்படுத்தி ஆசிப் ஷேக் 97 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்து இறுதியில் விராட் கோலியிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் அடித்த இந்த அரை சதத்தின் மூலம் அவர் ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ரெகுலரான ஒரு அணிக்கு எதிராக முதல் அரைச்சதத்தை அவர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.