இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரை போல் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அண்மையில் கூட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரின் தாய் விராட் கோலி கட்டியணைத்து அன்பை பரிமாறிய வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் மீண்டும் தனது சிம்மானத்தை பிடிப்பதற்கான பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டார். கடந்த 10 மாதங்களில் மட்டும் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியே முதலிடத்தில் இருக்கிறார். சதங்களே விளாசவில்லை என்று ரசிகர்கள் புலம்பிய போது டி20, டெஸ்ட், ஐபிஎல், ஒருநாள் என்று அத்தனை வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சதங்கள் விளாசி தள்ளுகிறார்.
இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் கிங் இஸ் பேக் என்று கொண்டாடி வருகின்றனர். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமான ஃபார்மில் சதம் விளாசி மிரட்டலான இன்னிங்ஸை ஆடினார். குறைந்த போட்டிகளில் 76 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடர் பக்கம் விராட் கோலியின் கவனம் திரும்பியுள்ளது. வெள்ளை ஜெர்சியில் சம்பவம் செய்த கோலி, இனி நீள ஜெர்சியில் சம்பவம் செய்ய காத்திருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடரில் கடைசி முறையாக களமிறங்குவதால் விராட் கோலிக்காக இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி முக்கியமான சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12,898 ரன்கள் விளாசிய உள்ள விராட் கோலி, இன்னும் 102 ரன்கள் சேர்த்தால் 13 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை விளாசிய 5வது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைப்பதோடு, குறைந்த போட்டிகளில் 13 ஆயிரம் ரன்கள் விளாசிய வீரர் என்ற முக்கியமான சாதனையையும் படைக்கவுள்ளார். வெறும் 265 இன்னிங்களில் ஆடியுள்ள விராட் கோலி 12,898 ரன்கள் விளாசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.