பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் விராட் கோலி 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
சிறப்பாக ஆடிய விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 47வது சதம் இதுவாகும். அதேபோல் ஒட்டுமொத்தமாக 77 சதங்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக பாகிஸ்தான நிக்கு எதிரான 94 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 122 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
ஷாகின் அப்ரிடி, நசீன் ஷா, ஹாரிஸ் ராஃப், ஃபஹீம் என்று பாகிஸ்தான் அணியின் சிறந்த 4 வேகப்பந்துவீச்சாளர்களாலும் விராட் கோலியை கட்டுப்படுத்த முடியவில்லை. முதல் 30 ரன்களை நிதானமாக சேர்த்த கோலி, அடுத்த 20 ரன்களை விரைவுபடுத்தினார். அரைசதம் கடந்த பின், அதிரடிக்கு மாறிய விராட் கோலி, 80 ரன்களுக்கு பின் டாப் கியரில் பறந்தார்.
இந்த சதம் விளாசியதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 267 இன்னிங்ஸ்களில் விளையாடி 13 ஆயிரம் ரன்களை விளாசி இருக்கிறார் விராட் கோலி. இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் தான் படைத்துள்ளார்.
இதன் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக விராட் கோலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன்பாக ஜெயசூர்யா, ரிக்கி பாண்டிங், சங்கக்காரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த சூழலில், 2023ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேலாக குவித்து அசத்தியுள்ளார். உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், விராட் கோலியின் ஃபார்ம் எதிரணிகளுக்கு பீதியை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.