13வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் ரோகித் ஷர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக் குழு இன்று அறிவிக்கப்பட்டது. இது குறித்த விவாதம் தான் சமூக வலைதளங்களில் இன்றைய ஹாட் டாபிக்காக இருக்கும் என பார்த்தால், இந்தியா என்ற பெயரை பாரத் என மத்திய அரசு மாற்றவுள்ளதாக உலா வரும் செய்திகள் தான் தற்போது பேசும் பொருளாக உள்ளது.
ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளுக்கு குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பபட்ட இரவு உணவு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என இருந்ததால், இச்செய்தி காட்டுத்தீயாக பரவியுள்ளது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாரத் மாதா கி ஜெய் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ஒருபடி மேல சென்று இந்திய அணி ஜெர்சியில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என பெயர் மாற்றுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். நமது உண்மையான பெயரான ‘பாரத்’ என்பதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. இந்த உலகக்கோப்பையில் கோலி, ரோகித், பும்ரா, ஜடேஜா ஆகியோரை உற்சாகப்படுத்தும், அதே நேரத்தில் பாரதத்தை நாம் இதயத்தில் வைப்போம்.
மேலும் இந்த உலகக்கோப்பையில் ஜெர்சியில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் இருக்க வேண்டும் என பிசிசிஐக்கும், ஜெய் ஷாவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பல நாடுகள் தங்களது பெயரை மாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1996ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையின் போது நெதர்லாந்து அணி ஹாலந்து என்ற பெயரில் விளையாடியது. பின் 2003ல் நாங்கள் அவர்களுக்கு எதிராக ஆடியபோது நெதர்லாந்து என பெயரை மாற்றிக்கொண்டது.
Team India nahin #TeamBharat.
This World Cup as we cheer for Kohli , Rohit , Bumrah, Jaddu , may we have Bharat in our hearts and the players wear jersey which has “Bharat” @JayShah . https://t.co/LWQjjTB98Z— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
மேலும் ஆங்கிலேயர்கள் வைத்த பர்மா என்ற பெயரை மியான்மர் என மாறியது என குறிப்பிட்டுள்ளார். பலரும் சேவாக்கின் இந்த பதிவுக்கு விமர்சித்துவருகின்றனர். முன்னதாக செப்.2ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தபோது, சேவாக் ‘பா vs பாக்’ என ஹேஷ்டேக் பதிவிட்டிருந்தார். இதனால் இந்த பெயர் மாற்றத்தை சேவாக் முன்பே கணித்தார் என பலரும் கூறிவருகின்றனர்.