இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது கடந்த ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா அணி 173 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.
அதன்படி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரத்தில் 270 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டை இழந்து இருந்த வேளையில் ஆஸ்திரேலிய அணியானது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்துள்ளது.
இதன் காரணமாக கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
ஆனால் அவர் ஆட்டமிழந்த இந்த ஒரு விக்கெட் தான் தற்போது அதிகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் போலந்து வீசிய பந்தில் சுப்மன் கில் தடுக்க நினைத்து எட்ஜ் எடுத்தார். பந்து எட்ஜானதும் நேராக மூன்றாவது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கிரீனை நோக்கி சென்றது.
அப்போது பந்தை பிடித்த கிரீன் தரையில் பட்டவாரே எடுத்தார். ரீபிளேவிலும் பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால் மூன்றாவது அம்பயர் வரை சென்ற அந்த விக்கெட் முடிவு இறுதியில் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பலரும் இதை நாட் அவுட் என்று கூறி வருகின்றனர். ஏனெனில் தெளிவான ஆதாரம் எதுவும் இன்றி இப்படி விக்கெட்டை கொடுத்திருக்கக் கூடாது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.
இதையும் படிக்கலாமே: ஆட்டத்தின் நடுவே இறங்கிய பேன்ட். உள்ளாடையில் மிகப்பெரிய ஒரு சாதனையை வைத்திருந்த லபுஷேன். உடனே ஜூம் செய்து படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்
இந்நிலையில் இந்த விக்கெட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் பதிவில் : மூன்றாவது அம்பயர் இந்த முடிவை எடுக்கும்போது கண்ணை மூடிவிட்டு எடுத்துவிட்டார் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.