இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்டவர் வீரேந்தர் சேவாக். இந்தியாவுக்காக 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். தொடக்க வீரர் என்றால் சேவாக் போல் அதிரடியாக விளையாட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டவர்.
இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடியதோடு, பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரது மருமகனும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான யு19 உலகக்கோப்பை அணிக்காக விளையாடிவர் மயங்க் டாகர்.
இடது கை சுழற்பந்துவீச்சாளரான இவரை பஞ்சாப் அணி 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால் தொடர் முழுவதும் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டார். இதன்பின் மீண்டும் 2023ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், ஐதராபாத் அணி பெரும் தொகை கொடுத்து மயங்க் டாகரை ஒப்பந்தம் செய்தது.
ஏலத்தின் போது மயங்க் டாகரை எடுக்க ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளிடையே போட்டியே ஏற்பட்டது. இறுதியாக ரூ.1.70 கோடிக்கு ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கு எதிராக மயங்க் டாகர் களமிறங்கினர். 3 போட்டிக்கும் சேர்த்து ஒரேயொரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியதால், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதோர் டிராபி நடைபெற்று வருகிறது. மயங்க் டாகர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் என்பதால் வடக்கு மண்டல அணிக்காக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் களமிறங்கிய மயங்க் டாகர், 7 ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
பின்னர் வடக்கு மண்டல அணி ஆடிய 2வது போட்டியில் மயங்க் டாகர் களமிறக்கப்படவில்லை. வீரேந்தர் சேவாக்கின் மருமகன் என்பதால் இவர் மீதான எதிர்பார்ப்பு கிரிக்கெட் நிர்வாகிகள் மத்தியில் அதிகரித்திருந்தது. ஆனால் அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதேபோல் சேவாக்கின் மருமகன் என்று அறிந்த பின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.