உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போலவே சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்கு முயற்சிக்க உள்ளது. முன்னதாக 2011 உலக கோப்பையில் சொந்த மண்ணில் எம்எஸ் தோனி தலைமையில் சச்சின், சேவாக், ஜஹீர் கான், யுவராஜ், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா என அனுபவமும் இளமையும் கலந்த அணியுடன் சொல்லி அடித்த இந்தியா லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிகளைப் பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
அதை தொடர்ந்து இலங்கைக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் ஆகியோர் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் கௌதம் கம்பீர் நங்கூரமாக நின்று 97 ரன்களும் கேப்டன் தோனி மறக்க முடியாத சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 91* ரன்களும் எடுத்து 28 வருடங்கள் கழித்து உலகக் கோப்பையை வென்று கொடுத்தனர். அந்த உணர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆனந்த கண்ணீர் விட்டதை ரசிகர்களால் மறக்க முடியாது.
சச்சினை சுமந்த கோலி:
அதை விட 1989இல் அறிமுகமாகி 24 வருடங்களாக 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 சதங்களையும் அடித்து இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது சுமந்து ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் சச்சினை விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்கள் தங்களது தோள் மீது சுமந்து கொடுத்த மரியாதையை யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் அந்த போட்டியில் மிகவும் கனமாக இருந்த சச்சினை தம்மால் சற்று அதிகப்படியான வயது எட்டிய காரணத்தாலும் எம்எஸ் தோனி முழங்கால் வலியுடன் இருந்த காரணத்தாலும் தூக்க முடியவில்லை என்று முன்னாள் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
அதனாலேயே விராட் கோலி போன்ற இளம் வீரர்கள் சச்சினை தங்களது தோளில் தூக்கி வான்கடே மைதானத்தை வலம் வந்து மரியாதை செய்ததாக கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த தருணத்தில் சச்சின் சற்று அதிக எடையுடன் இருந்ததால் எங்களால் தூக்க முடியாது என்று கருதி அதை செய்வதற்கு மறுத்து விட்டோம். ஏனெனில் நாங்கள் அந்த சமயத்தில் வயதானவர்களாக இருந்தோம்”
“குறிப்பாக எனக்கு தோள்பட்டையில் காயம் இருந்த நிலையில் எம்எஸ் தோனிக்கு முழங்கால் பிரச்சனை இருந்தது. அதனால் பாரமான அவரை தூக்கும் பொறுப்பை இளம் வீரர்களிடம் விட்டோம். மேலும் நீங்கள் சென்று சச்சினை தோளில் தூக்கி மைதானத்தைச் சுற்றி வலம் வந்து மரியாதை கொடுங்கள் என்று சொன்னோம். அதனால் தான் அப்போது அவரை விராட் கோலி தூக்கினார்” என்று கூறினார். சொல்லப்போனால் அந்த காரணத்தால் இந்தியாவின் கடந்த கால நாயகனாக கருதப்பட்ட சச்சினை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த விராட் கோலி தோளில் தூக்கியது எதிர்காலத்தை அப்போதே உணர்த்தும் வகையில் அமைந்தது என்றால் மிகையாகாது.