உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதன்பின் ஆடிய பென் ஸ்டோக்ஸ் – வோக்ஸ் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், வோக்ஸ் 51 ரன்களும் விளாசினார். அதேபோல்தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய மலான் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது.
இதன்பின் களமிறங்கிய நெதர்லாந்து அணி 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சிறிய நேரம் போராடிய கேப்டன் எட்வர்ட்ஸ் 38 ரன்களும், தேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் சேர்த்தனர். இறுதியாக நெதர்லாந்து அணி 37.2 ஓவர்காளில் 179 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த வெற்றி குறித்து பட்லர் பேசும் போது, நிச்சயம் வெற்றிபெற என்ற அதீத தேவையுடன் ஆவலாக இருந்தோம். தொடக்கத்தில் டேவிட் மலான் நிச்சயம் அதிரடியாக தொடங்கினார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் இருவரும் பார்ட்னர்ஷிப்பும் சிறப்பாக அமைந்தது. ஸ்டோக்ஸால் மட்டுமே இப்படியான இன்னிங்ஸை ஆட முடியும். அவரும் வோக்ஸும் இணைந்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார்கள்.
இந்த இலக்கு எங்களுக்கு நல்ல இலக்காக தெரிந்தது. ஆனால் இங்கு பேட்டிங் ஆடிய அனைத்து வீரர்களும் இது பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்று கூறினார்கள். டாஸை வென்றால் நிச்சயம் சிறப்பாக செயல்பட வேண்டும். தோல்விகளை திரும்பி பார்க்கும் போது, வேறுமாதிரி விளையாடி இருக்க வேண்டும் என்று குறைகளை காண முடியும். ஆனால் சிறந்த கிரிக்கெட்டை எப்போதும் ஆட வேண்டும்.
கிறிஸ் வோக்ஸ் எப்போதுமே கிளாசான கிரிக்கெட் வீரர். எப்போதும் சிறந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். அதேபோல் வோக்ஸின் வேகப்பந்துவீச்சு அருமையாக இருந்தது. நிச்சயம் ஒரு விக்கெட்டுக்கும் கூடுதலாக கிடைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டி மீதமுள்ளது. மோசமான தொடரின் இறுதியில் வெற்றியுடன் முடிப்பது எங்களின் தேவையாக உள்ளதாக தெரிவித்தார்.