இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக நேற்றிரவு கூட இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு, பிட்சையும் கண்காணித்தார்.
இதன் மூலமாக இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் ஸ்பின் பெரிதாக இருக்காது என்பதால், இன்றைய ஆட்டத்திலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்காது என்றே பார்க்கப்படுகிறது. இதனால் ஷர்துல் தாக்கூர் இந்திய அணியில் நீடிப்பார்.ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய வீரர்கள் இன்றும் களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்தித்து ரோகித் சர்மா பேசுகையில், ஒவ்வொரு முறையும் தேசிய கீதம் ஒலிக்கும் போது நான் எமோஷனலாகி விடுகிறேன். யார் தான் எமோஷனலாக மாட்டார்கள். அதேபோல் சொந்த மண்ணில் களமிறங்குவதால் எந்த பாதகமும் இந்திய அணிக்கு இல்லை. ரசிகர்களால் இந்திய அணிக்கு அழுத்தம் இருந்ததே இல்லை.
சொந்த நாட்டு ரசிகர்கள் முன் விளையாடும் போது நல்ல உணர்வை கொடுக்கிறது. ஆட்டத்தின் எந்த சூழல்களிலும் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதனால் ரசிகர்களின் ஆதரவை மிகப்பெரிய பலமாகவே பார்க்கிறேன். அதுவே நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.
நாங்கள் எந்த மண்ணில், மைதானத்தில், எந்த பிட்சில் விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. ஏனென்றால் ஆடுகளத்தை தயார்ப்படுத்தும் முடிவு எங்கள் கைகளில் இல்லை. அது பிளாக் சாயிலாக இருந்தாலும், ரெட் சாயிலாக இருந்தாலும் பிட்ச்சிக்கு ஏற்றபடியான வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். சோசியல் மீடியாவால் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக நான் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்துவதில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. இப்படிதான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் இடத்திலும் நான் இல்லை என்று கூறியுள்ளார்.