இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணி எளிய இலக்கை நிர்ணயித்ததால் இங்கிலாந்து அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் இங்கிலாந்து அணியோ அந்த கதையெல்லாம் இங்கு இல்லை என்பது போல் வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்திய அணி சார்பாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பேசும் போது, நிச்சயம் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆட்டத்தின் ஒரு பாதி முடிவடைந்த போது வெல்ல முடியும் என்று நினைத்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவறை தான் செய்கிறோம். பனிப்பொழிவு வரும் என்று எதிர்பார்த்து சேஸிங்கை தேர்வு செய்யவில்லை.
இந்த உலககோப்பை தொடரிலேயே இன்று சிறப்பாக பந்துவீசினோம். பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். 230 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் நான் பேட்டிங் வரும் போது அழுத்தத்தை குறைத்து அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இந்திய அணியின் உற்சாகத்தை குறைக்க நினைத்தேன்.
நிச்சயம் இந்த போட்டியில் இலக்கு எங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. ஆனால் அந்த சூழல் தான் அழுத்தத்தை கொடுத்தது. சீனியர் வீரர்கள் உட்பட எங்களின் சிறந்த ஆட்டத்திற்கும் எங்களுக்கும் இடையிலான தூரம் அதிகமாக உள்ளது. பவர்பிளே ஓவர்களை சிறப்பாக தொடங்கினோம். ஆனால் வித்தியாசமான பவுன்ஸ் பிட்சில் கிடைத்தது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் ஃபீல்டிங் சிறப்பாக அமைந்தது.
இன்றைய ஆட்டத்தில் எல்லாமே மாறும் என்று நினைத்தேன். ஆனால் எங்களின் பேட்டிங் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முதல் 8 இடங்களுக்குள் இடம்பிடிக்க வேண்டும். அதனை அறிந்து வைத்துள்ளோம். அதற்கு எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.