இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியானது நாளை செப்டம்பர் இரண்டாம் தேதி இலங்கையில் உள்ள கண்டி நகரில் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார்கள்.
அதன் பிறகு தற்போது நான்கு ஆண்டுகளுக்கு கழித்து ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர். இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வேளையில் நாளைய இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி நடைபெறும் கண்டி நகரில் நாளை 90% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளதால் நாளைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்டமிட்டபடி நாளைய இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறாமல் ரத்தானால் என்ன ஆகும்? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் நாளைய போட்டியில் மழை காரணமாக முற்றிலும் தடைபெறும் பட்சத்தில் ரிசர்வ் டே எதுவும் அறிவிக்கப்படாததால் மீண்டும் போட்டி நடத்தப்பட வாய்ப்பு இல்லை.
இதன் காரணமாக இரு அணிகளுக்குமே தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். அதன் காரணமாக பாகிஸ்தான் அணி ஏற்கனவே பெற்ற வெற்றியுடன் மூன்று புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி ஒரு புள்ளியுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கும்.
அதே வேளையில் நாளைய போட்டியில் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் இந்திய அணி நேபாள் அணிக்கு எதிராக வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு செல்லும். அப்படி நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.