ஐபிஎல் 2023- இன் 43 ஆவது போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகொடுக்கும் இடத்திலேயே கம்பீருக்கும், கோலிக்கும் இடையே ஒரு சீண்டல் நடந்தது. பின்னர் லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை வந்து கம்பீர் கையைப் பிடித்து அழைத்து சென்றார்.
கம்பீரின் இந்த செயலால் கோபமான கோலி, ஏதோ சொல்ல, அது கம்பீரை மேலும் கோபப்படுத்தியது. இதையடுத்து இருவரும் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கையாக அவர்களுக்கு போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இப்போது கம்பீர்- கோலி பிரச்சனை குறித்தே பேசிவருகிறது.
இருவரும் அவ்வளவு ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி கோலியிடம் கம்பீர் ‘நீ என்ன சொன்னாய்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு கோலி “உங்களிடம் நான் எதுவும் பேசாத போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள்” எனக் கேட்டுள்ளார்.
அதற்குக் கம்பீர் “நீ என் அணி வீரர்களை பற்றி அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என் குடும்பத்தைப் போன்றது.” எனக் கூறவே, பதிலுக்கு கோலி துடுக்காக “அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதன் பின்னர்தான் இருவரும் ஆக்ரோஷமாக நெருங்கி மேலும் சில கோப வார்த்தைகளை பேசியுள்ளனர்.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலி மற்றும் கம்பீருக்கும் இடையே யாராவது மூத்த வீரர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வேறு யாரும் முன்வரவில்லை என்றால் அதை தானே செய்ய முன்வருவதாகவும் கூறியுள்ளார்.