இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது.
சுமார் 4 மணி நேரமாக மழை பெய்ததால், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக கூட ஆட்டத்தை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. மழை வரும் என்பதை முன்பே கணித்த ஏசிசி, ரிசர்வ் டேவை அறிவித்ததால், இன்றும் ஆட்டம் தொடரவுள்ளது.
இந்த ஆட்டம் எங்கு நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கும். அதாவது இந்திய அணி 24.1 ஓவர்களில் இருந்து பேட்டிங்கை தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கொழும்பு வானிலை நிலவரம் போட்டிக்கு உகந்ததாக இல்லை என்று பார்க்கப்பட்டது.
கொழும்புவில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருவதால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்றும் நடப்பது சந்தேகம் தான் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது மழை நின்றாலும், மாலையில் மீண்டும் மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது 90 சதவீதத்திற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்த நிலையில், வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நாளன்றும், அதற்கு முந்தைய நாளிலும் மழை குறைந்திருந்தது.
It's been raining since early morning in Colombo. (Sports Hour). pic.twitter.com/9CCBOiAy5G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 11, 2023
தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடப்பது சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜெய் ஷாவை விமர்சித்து சமூக வலைதளங்களில் இடும் பதிவுகள் ட்ரெண்டாகி வருகின்றன.