இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது துவங்கப்பட்ட போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகப்பெரிய தொகைக்கு உரிமையாக்கியது. மேலும் அந்த ஆண்டு தோனியை ஏலத்தில் எடுத்து கேப்டனாக மாற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் இரண்டு வருடங்களில் நன்றாக செயல்பட்டாலும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதன் பிறகு 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு கோப்பைகளை வென்றது.
அதோடு 2018, 2021 ஆகிய சீசன்களில் வெற்றி பெற்று நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்று அசத்தியது. என்னதான் மும்பை அணி ஐந்து முறை கோப்பையை வென்றிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளின் வெற்றி சதவீத அடிப்படையில் சென்னை அணி 58 சதவீத வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதோடு இதுவரை நடைபெற்றுள்ள 15 சீசன்களில் 11 சீசன்களில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதோடு ஒன்பது முறை இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ளது.
இப்படி பலம் வாய்ந்த சென்னை அணியானது கடந்து 2015 ஆம் ஆண்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கு காரணமாக 2016 மற்றும் 2017 என இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு தடையில் இருந்து மீண்டு வந்த சென்னை அணியானது கம்பேக் கொடுத்த வருடமே கோப்பை வென்றும் அசத்தியிருந்தது.
இப்படி சென்னை அணி தடை செய்யப்பட்டிருந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு 2018 இல் மீண்டும் ஐபிஎல் களத்திற்கு சி.எஸ்.கே அணி திரும்பிய போது தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தரிடம் சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு கம்பேக் பாடலை தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதனை அனிருத் ரவிச்சந்திரன் மறுத்து விட்டதாகவும் தற்போது அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்த காரணத்தையும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இது குறித்து அனிருத் ரவிச்சந்தர் கூறுகையில் :
சென்னை அணி 2018-ஆம் ஆண்டு கம்பேக் கொடுக்கும் போது என்னிடம் சிஎஸ்கே நிர்வாகம் கம்பேக் பாடலை தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நான் முடியாது என்று மறுத்து விட்டேன். சி.எஸ்.கே அணி எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தோனியின் வெறியன் வேறு. ஆனால் நான் என்னால் அந்த பாடலை பண்ண முடியாது என்று கூறிவிட்டேன். ஏனெனில் ஏற்கனவே சென்னை அணிக்காக ஒரு சாங் இருந்தது. அதை யார் தயார் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த பாடலிற்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
என்னால் கூட அதை ரீகிரியேட் செய்ய முடியாது. அந்த அளவிற்கு அது ஒரு மேஜிக். நான் சிஎஸ்கே போட்டிகளை பார்க்கும்போது கூட “சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க” என்று வரும் பாடலைக் கேட்டால்தான் எனக்கே உற்சாகம் வரும். அதனால் அந்த பாடலே இருக்கட்டும் என்பதனால் தான் என்னால் கம்பேக் பாடலை பண்ண முடியாது என்று கூறிவிட்டேன். சூப்பர் ஸ்டார் என்றால் அண்ணாமலை படத்தில் வரும் மியூசிக் தான். அதேபோன்று சிஎஸ்கே என்றால் “சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க” என்ற பாடல்தான் நினைவுக்கு வரும் என்பதால் கம்பேக் சாங்கை என்னால் பண்ண முடியாது என்று கூறிவிட்டதாக அனிருத் ரவிச்சந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.