Homeகிரிக்கெட்உலக கோப்பை 2023க்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிக்க தகுதி இல்லாமல்...

உலக கோப்பை 2023க்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிக்க தகுதி இல்லாமல் இருப்பதற்கான 4 காரணங்கள்.

-Advertisement-

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியா சாதாரண இரு தரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்பட்டாலும் கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. முன்னதாக விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோர் ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற காரணத்தால் பதவி விலகிய பின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது ஒரு வீரராக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் கடந்த 2 வருடங்களில் பல தொடர்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2023 உலக கோப்பையுடன் நிறைவுக்கு வரும் பதவி காலத்துடன் அவர் வெளியேறினால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்நிலையில் அவர் மீண்டும் பயிற்சியாளராக ஏன் செயல்படக்கூடாது என்பதற்கான சில காரணங்களை பற்றி பார்ப்போம்:

-Advertisement-

1. பெரிய தொடர்களில் ஏமாற்றம்: ரவி சாஸ்திரி தலைமையில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை போல இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்ட இந்தியா அழுத்தமான பெரிய தொடர்களில் சொதப்பியது. அதனால் பதவி விலகிய அவருக்குப் பின் பொறுப்பேற்ற டிராவிட் தலைமையிலும் இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்விகளை சந்தித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக கடந்த 2013க்குப்பின் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் செய்து வரும் சொதப்பல்களை மிஞ்சி அழுத்தமான தருணங்களை சமாளிக்கும் அளவுக்கு தேவையான பயிற்சிகளையும் நுணுக்கங்களையும் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு கற்றுக் கொடுக்க தவறியதை இது காட்டுகிறது. அந்த வகையில் 2023 உலகக்கோப்பையிலும் அவர் வெற்றியை பதிவு செய்ய தவறும் பட்சத்தில் பயிற்சியாளராக தொடர எந்த தேவையுமில்லை என்றே சொல்லலாம்.

-Advertisement-

2. இளம் வீரர்கள் வளர்ப்பு: திறமைக்கு பஞ்சமில்லாத இந்திய அணியில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தரமான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதிலும் ராகுல் டிராவிட் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக முந்தைய ரவி சாஸ்திரி கூட்டணி சஞ்சு சாம்சன் போன்ற தரமான வீரர்களுக்கு போதிய கொடுக்காத அதே குறை டிராவிட் தலைமையிலும் நீடித்து வருகிறது.

அதை விட சோதனை என்ற பெயரில் கிடைக்கும் வாய்ப்பிலும் அசத்தும் இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத அவர் கேஎல் ராகுல் போன்ற சுமாராக செயல்படும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் புதுமையான பயிற்சியளர்களே இந்திய அணிக்கு தேவைப்படுகிறார்கள் எனலாம்.

3. வெளிநாட்டில் திணறல்: ரவி சாஸ்திரி தலைமையில் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இந்தியா சரித்திர வெற்றிகளை பெற்றது. ஆனால் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் நடந்த ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்தியா துபாயில் நடந்த 2022 ஆசிய கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்றது.

பொதுவாக வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவதே உண்மையான வெற்றியாக பார்க்கப்படும் நிலையில் அதை நிகழ்த்துவதற்கு தவறி வரும் ட்ராவிட்டுக்கு பதில் டிசம்பரில் தென்னப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடர் உட்பட வருங்காலங்களில் வெளிநாடுகளில் இந்தியா வெல்வதற்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.

4. புதிய முன்னேற்றம்: ரோகித் சர்மாவுடன் புதிதாக பொறுப்பேற்றதும் இங்கிலாந்து போல அதிரடியான பாதையில் விளையாடுவதே தங்களுடைய இலக்காக இருக்கும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். ஆனால் வாயில் வந்த அவருடைய வார்த்தைகள் முக்கியமான பெரிய தொடர்களில் இந்தியாவின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கவில்லை என்றே சொல்லலாம்.

குறிப்பாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆரம்பத்திலேயே பேட்டிங் சரிவு ஏற்படுவது, அடித்து நொறுக்க வேண்டிய டி20 கிரிக்கெட்டில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவது போன்ற அம்சங்கள் ராகுல் டிராவிட் வந்தும் இந்திய அணியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரராக அறியப்படும் அவர் பயிற்சியாளராகவும் அவ்வாறே செயல்படுவதால் நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்த புதிய பயிற்சியாளர் இந்தியாவுக்கு நியமிக்கப்படுவது சரியாக இருக்கும்.

-Advertisement-

சற்று முன்