இந்திய அணியின் கேப்டனாக 2007 முதல் 2016ஆம் ஆண்டு வரை செயல்பட்டவர் தோனி. ஒரு டி20 உலகக்கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த கோப்பைகளை அடுத்தடுத்து வென்று சாதித்து காட்டினார். இவருக்கு பின் வந்த கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவால் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. அண்மையில் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மோசமான தோல்வியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சொந்த மண்ணில் இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரில் விளையாட உள்ளது.
இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் காயத்தால் அவதியடைந்து வருகின்றனர். இதனால் இளம் அணியோடு இந்தியா களமிறங்க வேண்டிய நிலை உள்ளது.
இளம் வீரர்கள் அனைவரும் அதிகமான டி20 கிரிக்கெட்டை ஆடியிருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாமலே உள்ளனர். இதனால் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், இந்திய ஆடுகளங்களை புரிந்து கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இதற்காக 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை போல் தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஏனென்றால் இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தோனிக்கு இருப்பதால், அதன் மூலம் இளைஞர்களை எளிதாக வழிநடத்த முடியும். அதேபோல் எந்த ஆடுகளத்தில் எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது நல்லது, பிரஷர் சூழல்களில் இளம் வீரர்கள் அதிக அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது தோனியால் எளிதாக அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
குறிப்பாக ஸ்பின்னர்கள் இந்திய மைதானங்களில் எப்படி வீச வேண்டும் என்று தோனி அளவிற்கு ஆலோசனை கூற ஆட்களே இல்லை. அதனால் ஸ்பின்னர்களுக்கும் சரியாக ஆலோசகராக இருப்பார். அதேபோல் இளம் வீரர்கள் அனைவரும் தோனியை ஜாம்பவானாக பார்ப்பதால், தோனியின் ஆலோசனைகள் வீரர்களுக்கு எளிதாக சென்றடையும் என்றே பார்க்கப்படுகிறது.