தற்போது ஐபிஎல் விளையாடும் வீரர்களில் மூத்த வீரராக தோனிதான் உள்ளார். அதுமட்டுமில்லாமல் 41 வயதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் கேப்டனாகவும் வழிநடத்தி வருகிறார். சி.எஸ்.கே. அணி இந்தமுறை அவர் தலைமையில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பில் பிரகாசமாக நடைபோட்டு வருகிறது. சென்னை, சேப்பாக்கம் மட்டுமில்லாமல் சி.எஸ்.கே.வின் போட்டிகள் எங்கு நடந்தாலும், தோனிக்கான ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இதுதான் என ரசிகர்கள் நினைப்பதுதான். ஆனால் இதுபற்றி கேட்ட டேனி மோரிசனிடம் “இதுதான் என்னுடைய ஐபிஎல் சீசன் என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனி, போட்டிகளில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய சில பந்துகளே பேட் செய்கிறார் என்ற வருத்தமும் ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் சென்னை அணி சமீபத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் கடைசியாக களமிறங்கிய அணியின் கேப்டன் தோனி, 2 சிக்ஸர்கள் உள்பட 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
அப்போது அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பவுலரான மதீஷா பதீரனா அந்த விக்கெட்டைக் கொண்டாடுவது போல சைகையில் நின்றுகொண்டிருந்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தின.
அந்த புகைப்படத்தையே பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்க அட்மின் “பதிரனா, இது நீங்கள் வழக்கமாக கொண்டாடும் தருணமல்ல” எனக் கிண்டலடிக்கும் விதமாக பதிவு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்தனர்.
ஆனால் எல்லா குழப்பங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக பதிரனா “நான் தோனியின் விக்கெட்டைக் கொண்டாடவில்லை. அடுத்த இன்னிங்ஸில் பந்துவீச, தயாராகிக் கொண்டிருந்தேன். அது அந்த தருணத்தில் நான் கொண்டாட்டத்தில் உள்ளது போல தோன்றியிருக்கிறது” என விளக்கமளித்து குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.