ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் விராட் கோலி தொடர்பாக ஆர்சிபி எடுத்த முடிவு பற்றிய தகவல்கள் இணையத்தில் நெருப்பை பற்ற வைத்துள்ளது. இந்திய அணி கண்ட சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராக இருந்த விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை பல சீசன்கள் வழிநடத்தி வந்தார். ஆனால் இந்தியா மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி சில ஆண்டுகளுக்கு முன் விலகி கொண்டார்.
இதற்கு மத்தியில் தற்போது மெகா ஏலம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ள நிலையில் ஆர்சிபி அணி கோலியைத் தவிர மற்ற பல வீரர்களை அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக தக்கவைத்துக் கொள்ளாது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. கோலி, ராஜத் பட்டிதர், யாஷ் தயாள் ஆகிய வீரர்களை தவிர ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட பலரையும் அந்த அணி வெளியேற்ற உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்தது. ஆனால் உறுதியான தகவல் நாளை (31.10.2024) தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கேப்டனாக இருந்த பாஃப் டு பிளெஸ்ஸிஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாக, யார் புதிய கேப்டன் ஆவார்கள் என்ற கேள்வி பெரிதாக இருந்தது. இந்த நிலையில் தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விராட் கோலி கேப்டனாக ஐபிஎல் தொடரில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பை கூட இல்லாமல் இருக்கும் ஆர்சிபி அணியில் கோலி மீண்டும் கேப்டனானால் அந்த மோசமான ஒரு விமர்சனத்தை உடைத்து நொறுக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
இதனிடையே விராட் கோலி மீண்டும் கேப்டனாவது அந்த அணிக்கு பல வழிகளில் சாதகமாக இருப்பதாகவும் சில காரணங்களை பட்டியலிட்டு வருகின்றனர். புதிய கேப்டனை தேட வேண்டும் என்ற நெருக்கடி பெங்களூர் அணிக்கு இருக்கலாம். இதனால் கோலியை கேப்டனாக மாற்றி விட்டால் அந்த இடத்தில் வேறொரு வீரரை புதிதாக அதிக பணத்தில் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
அதுமட்டுமில்லாமல் கேப்டனாக புதிய வீரரை தேர்வு செய்தால் ஒட்டுமொத்தமாக வீரர்களை புரிந்து கொண்டு புதிதாக தயாராகவும் சில நேரம் எடுத்துக் கொள்ளும். அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி அணி பற்றி பல விஷயங்கள் தெரிந்த கோலி கேப்டன் ஆனால் வீரர்களுடன் உரையாடவும் எளிதாக இருக்கும். அத்துடன் ஆர்சிபி அணி கேப்டனை நினைத்து கவலை கொள்ளாமல் ஒரு சிறந்த அணியை கட்டமைப்பதற்கான வேலைகளிலும் கவனம் செலுத்தலாம். இப்படி கோலி மீண்டும் கேப்டனானால் அதில் நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.