உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தி இருக்கிறது. இந்திய அணி கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடியது.
கொல்கத்தாவில் அமைந்திருக்கும் ஈடன் கார்டனஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படவில்லை என்ற போதிலும், சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து, அதிரடியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சாக இது அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில், நேற்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராஸா, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் இன்-ஃபார்ம் வீரர் ரஸ்ஸி வேன் டெர் டுசென் டி.ஆர்.எஸ்.-இல் அவுட் ஆனதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
களத்தில் இருந்த அம்பயர் ஜடேஜா மற்றும் இந்திய வீரர்கள் அப்பீலுக்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணி ரிவ்யூ கேட்டது. அதில் பந்து லெக் ஸ்டம்ப்-ஐ பதம் பார்த்தது. பிறகு களத்தில் இருந்த அம்பயரின் தீர்ப்பு மாற்றப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டதால், வேன் டெர் டுசென் 13 ரன்களில் வெளியேற வேண்டிய நிலை உருவானது.
இது குறித்து பேசிய ஹசன் ராஸா, “ஜடேஜா தனது வரலாற்றில் மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நாம் தொழில்நுட்பம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, டி.ஆர்.எஸ். எடுக்கப்பட்டது. வேன் டெ டுசென் பேட்டிங் செய்த போது, பந்து லெக் ஸ்டம்ப்பில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்ப்-ஐ தாக்கியது. இது எப்படி சாத்தியமாக முடியும்?”
“இம்பேக்ட் லைனில் இருந்தது, பந்து லெக் ஸ்டம்ப் நோக்கி சென்றது. எல்லோரையும் போன்று, நானும் எனது கருத்தையே முன்வைக்கிறேன். இதுபோன்ற விஷயங்களை சரிபார்க்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். டி.ஆர்.எஸ். உள்நோக்கத்துடன் மாற்றப்படுவது, தெளிவாக தெரிகிறது,” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே இவர், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணிக்கு மட்டும் விசேஷமான பந்துகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து எதிரணி வீரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.