உலகக் கோப்பை 2023 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நேற்று (நவம்பர் 5) விளையாடிய இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றது. இதே போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 49-வது சதத்தை விளாசினார். இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார்.
நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 24 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என மொத்தம் 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக எகிறியது.
பிறகு, களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடினார். இவருடன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்ரேயாஸ் அய்யர் 77 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே வந்தது. மேலும் விக்கெட்டுகள் விழாமல் இருந்தது. முதல் இன்னிங்ஸ் முடியும் வரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி தனது 49-வது சதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்த நிலையில், விராட் கோலியின் இன்னிங்ஸ் சுயநலமிக்க ஒன்றாக இருந்தது என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. எக்ஸ் தளத்தில் வைரலாகும் சுயநலவாதி (Selfish) என்ற ஹாஷ்டேக்கில் விராட் கோலியின் அபார ஆட்டத்தை குறிப்பிடாமல், அவர் சாதனைக்காக விளையாடியதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா, “இது விராட் கோலிக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது மிகவும் கடுமையான பிட்ச் ஆக இருந்தது. சமயங்களில் இதில் இருந்து 260 முதல் 270 ரன்களை எடுப்பதே கடினம் என்று தோன்றியது. ரன்கள் பெருமளவு குறைந்த சமயத்தில் விராட் கோலி ஸ்டிரைக்கை சுழற்றினார். தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். அவுட் ஆகாமல் ஒன்றிரண்டு ரன்களை ஓடியே எடுத்து, 300-க்கும் அதிக ஸ்கோரை அடைய தீவிர முயற்சி அவசியம்.”
“அவர்கள் பந்துவீசிய போது, டிராக் உதவிகரமாக இருந்தது. பிட்ச்-இல் அதிக டர்ன் ஆகி, விக்கெட் பவுன்ஸ் ஆகாமலும் இருந்தது. எனது கருத்தை கேட்டால், இந்த பிட்ச் மாலை வேளையுடன் ஒப்பிடும் போது, மதியத்தில் அதிக கடினமாக இருந்தது. அந்த சூழலில் பேட்டிங் செய்வது எளிமையான காரியமே இல்லை.”
“மதியத்தில் பந்து ஸ்ரோ டர்ன் ஆனது. இதனால் பெரிய ஷாட்களையும் அடிக்க முடியாது. தென் ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை விராட் கோலி எதிரகொண்ட விதம் பாராட்டுக்குரியது. கொல்கத்தா பிட்ச்-இல் லோ-பவுன்ஸ் டிராக் இருக்கும், அது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் அறிந்ததுதான்.”
“நாங்கள் எங்களுக்கு சவால் வைத்துக் கொண்டோம். மாலையில் பணி படர்ந்த பிறகு, எப்படி பந்துவீச வேண்டும், எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்பதை பார்க்கவே நினைத்தோம்,” என்று தெரிவித்தார்.
விராட் கோலியின் இன்னிங்ஸ் சாதனைக்கானதாக இருந்தது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வரும் சூழ்நிலையில், ரவீந்திர ஜடேஜா கருத்துக்கள் கள யதார்த்தை புரியவைக்கும் வகையிலும், வெற்றிக்கான சமபங்கு விராட் கோலியை சேரும் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.