இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் எப்போதும் பேரன்புக்குரியவராக இருந்து வந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மீது தான் வைத்திருக்கும் மரியாதையை விராட் கோலி பல சமயங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு பேசிய விராட் கோலி, “சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியை நீண்ட காலம் தனது தோள்களில் தாங்கி பிடித்து வந்துள்ளார், நாங்கள் அவரை எங்களின் தோள்களில் சுமக்க இது தான் சரியான தருணம்,” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வரிசையில், நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 49-வது சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுலர்கரின் சாதனையை சமன் செய்தார்.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய விராட் கோலி, “இன்றைய போட்டி மற்றொரு சாதாரண போட்டி இல்லை என்ற ஆர்வத்தில் தான் கண்விழித்தேன். துவக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, அடுத்து வருபவர்களும் அதே மாதிரி விளையாட வேண்டும் என தோன்றும். ஆனால், பந்து பழையதாகும் போது சூழல் முற்றிலுமாக மாறிவிட்டது.
“எனது ஹீரோவின் (சச்சின்) சாதனையை சமன் செய்தது எனக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது. பேட்டிங் என்று வந்துவிட்டால் அவர் அதில் குறைபாடற்றவர். ஆனால், என்னால் அவரை போன்று சிறப்பாக இருந்துவிட முடியாது.”
“இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம் ஆகும். நான் எங்கிருந்து வருகிறேன் என்று எனக்கு தெரியும். நான் அவரை தொலைக்காட்சிகளில் பார்த்த நாட்கள் எனக்கு நினைவிருக்கிறது. அந்த வகையில் அவரிடம் இருந்து பாராட்டை பெறுவது எனக்கு மிகவும் சிறப்பான விஷயம் ஆகும். கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருக்கிறேன். இது தான் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.”
“இப்படியான மகிழ்ச்சியை கடவுள் எனக்கு கொடுத்து ஆசிர்வதித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் நான் செய்ததை, இப்போதும் செய்ய முடிவதை நினைத்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தொடரின் மிகவும் கடினமான அணியை எதிர்கொண்டு விளையாடிய வகையில், இது பெரிய போட்டியாகும். சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஊக்கம் இருந்து கொண்டே இருந்தது. எனது பிறந்தநாளில் இவ்வாறு நடைபெற்றது, எனக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக அமைந்ததோடு, மக்கள் இதனை எனக்கு மேலும் சிறப்பான விஷயமாக மாற்றி இருக்கின்றனர்.
களத்தில் நான் இருக்கும் போது, ‘விளையாடிக் கொண்டே இரு’ என்ற மெசேஜ் தெளிவாக இருந்தது. அந்த வகையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 315 ரன்களை கடந்ததும், அது அளவுக்கு மீறிய ஸ்கோர் என எங்களுக்கு தெரிந்துவிட்டது. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதை அடுத்து என்னை நானே கொண்டாடுகிறேன். எல்லாவற்றுக்கும் மேல் அது தான் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என விராட் கோலி கூறியுள்ளார்.
போட்டியின் போது தனது சாதனையை விராட் கோலி சமன் செய்ததும், சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதில், “சிறப்பாக விளையாடினாய் விராட். 49-இல் இருந்து 50-ஐ கடக்க எனக்கு 365 நாட்கள் ஆனது. ஆனால், அடுத்த சில நாட்களில் 49-இல் இருந்து 50-க்கு முன்னேறி எனது சாதனையை நீ முறியடிப்பாய் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.