இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகின் 10 முன்னணி அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளையும் அறிவிக்க ஏற்கனவே ஐசிசி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை கெடு வைத்திருந்தது. அந்த வகையில் அனைத்து அணிகளுமே தற்போது உலகக்கோப்பை தொடருக்கான அணியை வெளியிட்டிருந்த வேளையில் அந்த அணிகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதை செய்வதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 28-ஆம் தேதியை ஐசிசி அறிவித்திருந்தது.
அந்த வகையில் தற்போது அனைத்து அணிகளும் தங்களது உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் செய்யக்கூடிய மாற்றங்கள் குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஏதாவது வீரர்கள் தனிப்பட்ட காரணத்தினால் விலகினாலோ அல்லது காயத்தினால் விளையாட முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கான மாற்றுவீரரை செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் அறிவிக்கலாம். அந்த வகையில் ஏற்கனவே 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்த வேளையில் தற்போது அக்சர் பட்டேல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் விளையாடவில்லை.
மேலும் மூன்றாவது போட்டியில் அவர் இடம் பெறுவாரா? என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் ஃபிட்டாக இல்லை என்றால் அக்சர் பட்டேலுக்கு பதிலாக மாற்றுவீரரை கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஸ்வின் இடம்பெற்றுள்ளதால் உலகக் கோப்பை தொடருக்கான மாற்றுவீரராக அவரை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ரன்கள் அதிகளவில் கசிவதால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு சில இடங்களில் மட்டுமே சிக்கல் இருக்கும் வேளையில் ஒருவேளை அந்த இடத்திற்கான மாற்றங்கள் செய்யப்பட்டால் அந்த விவரங்கள் செப்டம்பர் 28-ஆம் தேதி உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.