என்ன தான் சர்வதேச போட்டிகளில் ஒரே அணியில் இணைந்து ஆடினாலும் ஐபிஎல் என வரும் போது ஏதோ எதிரிகள் போல தான் இருப்பார்கள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரையில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இவர்கள் அனைவரும் இணைந்து ஆடும் போது இந்த ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து வெற்றியை கொண்டாடி தீர்ப்பார்கள்.
ஆனால், அதே நேரத்தில் ஐபிஎல் தொடர்கள் என வந்து விட்டால் ரோஹித் ரசிகர்கள் கோலிக்கு எதிராகவும், கோலி ரசிகர்கள் ரோஹித்திற்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து கொண்டே இருப்பார்கள். மைதானத்தில் இருக்கும் ரசிகர்களும் இதே பாணியை பின்பற்ற, அங்கே எப்போதும் விறுவிறுப்பாக தான் இருக்கும்.
இதனால், இந்திய வீரர்கள் தனித்தனியாக பிரிந்து ஆடும் ஐபிஎல் தொடருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கடைசி பந்து வரை கணிக்க முடியாத அளவிற்கு இருக்க, அப்படி ஒரு ஆட்டம் தான் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அமைந்திருந்தது.
ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களின் லீக் சுற்றின் கடைசி போட்டியில் மோதி இருந்தனர். இதன் கடைசி ஓவரில் சென்னை அணி 17 ரன்கள் எடுத்தால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம். மாறாக பெங்களூரு அணி வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப்பிற்கு முன்னேறி விடுவார்கள்.
இப்படி ஒரு பரபரப்பான கட்டத்தில் அந்த ஓவரை வீசிய யாஷ் தயாள், முதல் பந்தில் தோனிக்கு எதிராக சிக்ஸ் கொடுத்து அடுத்த பந்திலேயே கம்பேக் கொடுத்து அவரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதன் பின்னர், சிஎஸ்கேவால் வெற்றி பெற முடியாமல் போக, ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றிருந்தது.
இது பற்றி தற்போது பேசியுள்ள யாஷ் தயாள், “முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்ததும் என்னிடம் வந்து பேசிய கோலி, ‘தோனி பாய்க்கு அதிகம் வேகமாக போட வேண்டாம். ஏனென்றால் அவருக்கு வேகமான பந்துகளை அடிப்பது பிடிக்கும். இதனால் மெதுவாக வீசுங்கள்’ என என்னிடம் அறிவுறுத்தினார். அத்துடன் நெருக்கடி இல்லாமல் அமைதியாக செயல்படவும் கூறி கோலி எனக்கு உதவியாக இருந்து அறிவுரை வழங்கினார்” என யாஷ் தயாள் கூறி உள்ளார்.
கோலி கூறியது போலவே அடுத்த பந்தில் யாஷ் தயாள் வேகத்தை குறைக்க, தோனி அவுட்டாகி சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.